உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரைமருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
தற்போதைய சூழ்நிலையில் சீனா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு எச்.ஐ.வி.க்கான மருந்து வழங்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 2 இத்தாலி சுற்றுலா பயணிகள் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு எச்.ஐ.வி.க்கான மருந்து வழங்கப்பட்டது. இதன்காரணமாக இருவரும் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவர்கள், தேசிய நோய் தடுப்பு மைய நிபுணர்கள், உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் இணைந்து கோவிட் -19 வைரஸ் காய்ச்சலுக்கான சிகிச்சை முறை வழிகாட்டு நெறிகளை திருத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அறுபது வயதுக்கு மேற்பட்ட, கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள நோயாளிகளுக்கு எச்.ஐ.வி. கூட்டு மருந்தான லோபினாவிர், ரிடோனாவிரை அளிக்க பரிந்துரை செய்யப்படுகிறது. எனினும் இந்த மருந்தை வழங்குவது தொடர்பாக நோயாளிகள், உறவினர்களிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்.
காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள நோயாளிகளை, மருத்துவர்கள் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளால் நோயாளிகள் அவதியுறும்போது உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்.நோயாளிகள்மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நம்பிக்கையூட்டும்விதமாக மருத்துவர்கள் பேச வேண்டும். அவர்களிடம் அவ்வப்போது தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.