கரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதைத் தடுக்கும் வகையிலும், மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விலையை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக ரயில்வே உயர்த்தி அறிவித்துள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள். 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ள கரோனா வைரஸுக்கு இதுவரை 120 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கையாகப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு நாடு முழுவதும் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது. மக்கள் கூடுமிடங்களான ஷாப்பிங் மால், திரையரங்குகள் ஆகியவற்றையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ரயில் நிலையல்களில் ஏ.சி. பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் கம்பளிப் போர்வை போன்றவை வழங்கப்படாது என்று ஏற்கெனவே ரயில்வே அறிவித்துள்ளது. ஏனென்றால் அந்தப் போர்வைகளை அடிக்கடி துவைப்பதில்லை என்பதால் அவற்றின் மூலம் கரோனா வைரஸ் பரவும் என்பதால் போர்வைகள் திரும்பப் பெறப்பட்டன.
இந்த சூழலில் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நடைமேடை டிக்கெட் கட்டணத்தை ரயில்வே துறை அதிரடியாக உயர்த்தியுள்ளது. வழக்கமாக 10 ரூபாய் நடைமேடைக் கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட மும்பை, வதோதரா, அகமதாபாத், ரத்லாம், ராஜ்கோட், பவாநகர் உள்ளிட்ட 250 ரயில் நிலையங்களில் இது நடைமுறைக்கு வந்துள்ளது.
தெற்கு ரயில்வேயைப் பொறுத்தவரை சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய ரயில்வேயில் உள்ள புசாவல், நாக்பூர், சோலாப்பூர், புனே ஆகிய மண்டலங்களிலும் நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கரோனா வைரஸ் அச்சம் காரணமாக, ரயில் நிலையங்கள் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நடைமேடைக் கட்டணத்தை 50 ரூபாயாக உயர்த்தியுள்ளோம். விரைவில் அனைத்து மண்டலங்களும் கட்டணத்தை உயர்த்த உள்ளன" எனத் தெரிவித்தார்.