இந்தியா

கரோனாவால் பசு கோமியம், சாணம் ரூ.500-க்கு விற்பனை

ஐஏஎன்எஸ்

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மேற்கு வங்கத்தில் பசுவின் சாணம் மற்றும் கோமியம் 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மேற்கு வங்கத்தின் தலைநகரத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள பகுதி டங்குனி. அங்குள்ள பால் வியாபாரி, கரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள புதுமையான முறையில் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் டெல்லி மற்றும் கொல்கத்தாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 19-ல் மபூத் அலி வியாபாரம் செய்கிறார். பசுவின் சாணத்தைப் பாக்கெட்டில் அடைத்தும் கோமியத்தை ஜாரில் நிரப்பியும் விற்பனை செய்து வருகிறார்.

''பசுவின் கோமியத்தைக் குடியுங்கள். கரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள்'' என்ற வாசகம் அவரின் மேசை மீது இருக்கிறது.

இதுகுறித்துப் பேசுபவர், ''என்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. ஒன்று இந்தியப் பசு மற்றொன்று ஜெர்சி பசு. பால் விற்பனை மூலம் சம்பாதித்து வருகிறேன். ஒருநாள் இந்து மகா சபை நடத்திய கோமுத்ரா நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். அதன்பிறகு சாணம் மற்றும் கோமியத்தை விற்பனை செய்து சம்பாதிக்கலாம் என்று உணர்ந்தேன்.

அதையே தற்போது செய்து வருகிறேன். ஒரு கிலோ சாணம் மற்றும் ஒரு லிட்டர் கோமியத்தை 500 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். எனினும் ஜெர்சி பசுவுடைய பொருட்களுக்கான விலை குறைவாகவே உள்ளது. அதற்குத் தட்டுப்பாடும் ஏற்படவில்லை.

மக்களிடையே இந்தப் பொருட்களுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

பசுவின் சாணமோ, கோமியமோ கரோனாவைக் குணப்படுத்தும் என்று அறிவியல்பூர்வமாக எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT