கரோனா வைரஸ் பரவுவது தீவிரமடைவதைத் தடுக்கும் நடவடிக்கையாக ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இந்தியாவுக்குள் நுழையத் தடை விதித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது
இந்த தடை உடனடியாக நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஐரோப்பிய யூனியன் உள்ள 32 நாடுகளில் இருந்து வரும் 18-ம் தேதி முதல் இந்தியாவுக்குள் பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய தடையில்லா வர்த்தக நாடுகள், துருக்கி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் 18-ம் தேதி முதல் பயணிகள் இந்தியாவுக்குள் வரத் தடை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதிதாக இந்த நாடுகளும் தடையில் சேர்க்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, கர்நாடகா, மும்பையில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இருப்பினும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த 6ஆயிரத்துக்கும் பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிதாகக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது அதன்படி, " கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதையடுத்து ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் யாரும் மார்ச் 31-ம் தேதிவரை இந்தியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்படுகிறார்கள். இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இது தற்காலிகமான நடவடிக்கை மட்டும்தான். " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது