கர்நாடக மாநிலம் கலபுர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 10-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த காய்ச்சல் வேகமாக பரவும் என தகவல் வெளியானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிலையங்கள், வணிக வளாகம், திரையரங்கம், பூங்கா, உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்டவை ஒரு வாரத்துக்கு மூடப்பட்டன.
பெங்களூருவில் இயங்கிவரும் பெரும்பாலான பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் மூடப்பட்டு, வீட்டில் இருந்தவாறு பணியாற்றுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சுதாகர் ரெட்டி நேற்று பெங்களூரு ராஜீவ் காந்தி அதிநவீன மருத்துவமனையில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆய்வு செய்தார். மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் சுதாகர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் ஏற்கெனவே 6 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்புர்கியில் உயிரிழந்த 76 முதியவருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 3 பேர் கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. ஆனால் முதியவரின் 46 வயது மகளுக்கு கோவிட்-19 வைரஸ் நோய் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே போல கடந்த 8-ம் தேதி லண்டனில் இருந்து வந்த பெங்களூரு தகவல் தொழில்நுட்ப பொறியாளருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்கெனவே உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது அவருடன் விமானத்தில் வந்தவர்களை பரிசோதித்த போது, அவரது பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணுக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் இதுவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 150 முதல் 200 படுக்கை வசதிகளைக் கொண்ட கோவிட்-19 வைரஸ் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது''என்றார்.
இதனிடையே முதல்வர் எடியூரப்பா கூறும்போது, '' கர்நாடகாவில் கோவிட்-19 வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட 8 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்கவும், நோயை எதிர்கொள்ள தேவையான சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. எங்களுக்கு தனியார் நிறுவனங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவி வருகின்றன. எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். வெளியூர் மற்றும் வெளிமாநில பயணங்களை தவிர்த்து வீட்டிலே இருக்க வேண்டும்'' என்றார்.