இந்தியா

‘கோவிட்-19’ வைரஸ் பரவலைத் தடுக்க மார்ச் 30-ம் தேதி வரை சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தம்

செய்திப்பிரிவு

கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க, ‘இண்டியன் மோஷன் பிக்சர் தயாரிப்பாளர்கள் சங்கம்’ திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் தயாரிக்கும் பணியை மார்ச் 19 முதல் 30-ம் தேதி வரை நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெடுத்து வரும் நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் விதமாக இந்த முடிவை இண்டியன் மோஷன் பிக்சர் தயாரிப்பாளர்கள் சங்கமும் மேற்கு இந்தியத் திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பும் இணைந்து கடந்த ஞாயிறு அன்று எடுத்தன.

நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் படப்பிடிப்புப் பணிகளை அடுத்த 3 நாட்களுக்குள் முடித்துவிட்டுத் திரும்பும்படி தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் கவுன்சிலின் துணைத் தலைவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான ஜே.டி.மஜேதியா கூறுகையில், “ஒட்டுமொத்த நாடு, சமூகம் மற்றும் திரைத்துறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியத் திரைத் துறைச் சங்கங்கள் வரும் 19-ம் தேதி முதல் 31-ம்தேதி வரை திரைப்படம் மற்றும்தொலைக்காட்சி நாடகங்களுக்கான படப்பிடிப்பை நிறுத்திவைக்க முடிவெடுத்துள்ளன” என்றார்.

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கத் தலைவர் அஷோக் பண்டிட் கூறியதாவது:

உலகம் முழுவதும் ‘கோவிட்-19’ பரவி மக்களை கடுமையாக பாதித்து வருவதால் நாடு முழுவதும் உள்ள திரைத் துறை சங்கங்களோடு கலந்தாலோசித்துப் படப்பிடிப்பை நிறுத்தி வைக்கும் முடிவை ஒருமனதாக எடுத்திருக்கிறோம். மூன்று நாட்கள் அவகாசத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு திரும்பும்படி தயாரிப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்த கால அவகாசத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகளும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குறித்த திட்டமிடலை செய்து கொள்வார்கள். வைரஸை ஒழிப்பதில் திரைத் துறை கண்ணும் கருத்துமாக உள்ளது. படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்படும் நாட்களில் படப்பிடிப்பு தளங்களில் சுகாதாரம் மற்றும் தூய்மை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அஷோக் கூறினார்.

SCROLL FOR NEXT