கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில், டெல்லியில் மதக் கூட்டம், அரசியல் கட்சிகள் கூட்டம், போராட்டம் ஆகியவற்றில் 50 பேருக்கு மேல் கூட வரும் 31-ம் தேதி வரை தடை விதித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக், ஜாமியா மிலியா ஆகிய பகுதிகளில் மக்கள் 90 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர் கேஜ்ரிவாலின் இந்த அறிவிப்பால் அந்தப் போராட்டம் முடித்துக் கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்கள், தாங்கள் முகக் கவசம், கைகளைச் சுத்தம் செய்யும் திரவம் பயன்படுத்திக் கொள்வோம். கரோனாவைக் கண்டு அச்சப்படமாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தலைநகர் டெல்லியில் இதுவரை 7 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கரோனா வைரஸ் தொற்று குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். டெல்லியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கரோனா வைரஸுக்குப் பலியாகியுள்ளார்.
டெல்லியில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சித் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் 31-ம் தேதி வரை அனைத்துப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும், விடுமுறை அறிவித்தது. மேலும், அனைத்து விளையாட்டுப்போட்டிகளையும் நடத்தத் தடை விதித்து திரையரங்குகளை 31-தேதி வரை மூட உத்தரவிட்டது.
இந்நிலையில் கரோனா வைரஸைத் தடுக்கும் வகையில் இன்று மேலும் புதிய தடைகளை டெல்லி அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, உயர் அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் ஆகியோர் இன்று கூடி ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையின் முடிவில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது:
''டெல்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் டெல்லியில் உள்ள அனைத்து உடற்பயிற்சிக் கூடங்கள், நைட் கிளப் ஆகியவற்றை வரும் 31-ம் தேதி வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, மதரீதியான கூட்டம், கலாச்சார ரீதியான கூட்டங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் 50 பேருக்கு மேல் கூடுவதற்கு மார்ச் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடு போராட்டம் நடத்துபவர்களுக்கும் பொருந்தும்.
திருமண விழாக்கள் நடத்துவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. ஆனால், சூழலைக் கருதி திருமணத் தேதிகளைத் தள்ளி வைப்பது நலம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் வகையில் அனைத்து வாடகைக் கார்கள், ஆட்டோக்களில் மருந்து தெளிக்கப்படும். டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும்.
தலைநகர் டெல்லியில் இதுவரை 7 பேருக்கு கரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 4 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கரோனாவில் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெறுவதற்குத் தேவையான படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான மருத்துவமனைகளும் தயாராக உள்ளன. பயணிகளைத் தனிமைப்படுத்தி வைக்க லெமன் ட்ரீ, ரெட் ஃபாக்ஸ், ஐபிஐஎஸ் ஆகிய 3 ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன''.
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.