கரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ள கேரள அரசு, ரயில்வே துறையுடன் இணைந்து ஓடும் ரயிலில் பயணிகளுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை 110 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் நேற்றுவரை 24 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். கரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் கேரள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அதில் ஒரு முயற்சியாக ஓடும் ரயிலில் மருத்துவர்கள் மூலம் கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தும் திட்டமாகும். கேரள அரசின் முயற்சிக்கு ரயில்வே துறையும் ஒத்துழைப்பு வழங்கி இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், " திருவனந்தபுரத்தில் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் முயற்சியைக் கேரள அரசுடன் இணைந்து தொடங்கியுள்ளோம்.
ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தெர்மல் கருவிகள் மூலம் பயணிகளின் உடல் வெப்பநிலையைக் கண்காணிக்கும் முறையைச் செயல்படுத்தியுள்ளனர். இதன் மூலம் பயணிகளுக்கு உடல் வெப்பம் இயல்புக்கு அதிகமாகவோ அல்லது இருமல், காய்ச்சல், போன்ற அறிகுறிகள் இருந்தாலோ அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதுடெல்லி ரயில்வே நிலையத்தில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உதவுவதற்காகவே தனியாகச் சேவை மையம் ரயில்வே துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து ரயில்நிலையங்களில் உள்ள பயணிகள் காத்திருக்கும் அறையிலும் கைகழுவும் திரவம், சானடைஸர் போதுமான அளவு வைக்கப்பட்டுள்ளது.
கரோனோ வைரஸ் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் ஏ.சி. ரயிலில் பயணிகளுக்குக் கம்பளிப் போர்வை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் தங்களின் சொந்த போர்வைகளைக் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்