காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் : கோப்புப்படம் 
இந்தியா

குஜராத் அரசியலில் புது குழப்பம்: காங்.எம்எல்ஏக்கள் 4 பேர் திடீர் ராஜினாமா

பிடிஐ

மத்தியப்பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டிருக்கும் சூழலி்ல் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 4 பேர் திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.

சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியிடம் தங்களின் ராஜினாமா கடிதத்தை 4 எம்எல்ஏக்களும் அளித்துள்ளனர் அதை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டுவிட்டார்.

வரும் 26-ம் தேதி குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள் ராஜினாமா வியப்பை ஏற்படுத்தியுள்ளது

சபாநாயகர் திரிவேதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், " காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை என்னிடம் அளித்தார்கள். அவர்கள் யார் எனும் விவரத்தைச் சட்டப்பேரவையில் நாளை தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்தார்

குஜராத் சட்டப்பேரவையில் மொத்தம் 182 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 73 எம்எல்ஏக்கள் இருந்தநிலையில் இப்போது 69 ஆகக் குறைந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் வரும் 26-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு நடைபெற உள்ளது. அதில் எம்எல்ஏக்கள் ஆதரவைக் குறைக்கும் நோக்கில் பாஜகவினர் சதி செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது

பாஜக சார்பில் அபய் பரத்வாத், ரமிலா பாரா, நல்ஹரி அமின் ஆகிய 3 வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது. ஆனால், பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் தலா 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் சூழல் இருக்கிறது.

ஆனால், பாஜக சார்பிலோ 3 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.காங்கிரஸ் கட்சி சார்பில் சக்திசிங் கோகில், பாரத்சிங் சோலங்கி ஆகியோர் உள்ளனர்.

பாஜக ஏதாவது திரைமறைவு வேலையில் ஈடுபடும் என்பதால் 14 எம்எல்ஏக்களை காங்கிரஸ் கட்சி ஜெய்பூருக்கு அனுப்பியுள்ளது. இதனால் பாஜகவின் மூன்றாவது வேட்பாளர் தோல்வி அடையும் சூழல் இருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளார்கள். கட்சி மாறி வாக்களித்தல், அல்லது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்களிக்க வராமல் தடுத்தல், அல்லது ராஜினாமா செய்தல் போன்றவை நடந்தால் பாஜகவின் 3-வது வேட்பாளர் வெற்றி உறுதியாகும் சூழலில் ராஜினாமா நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT