காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, பிரதமர் மோடி : கோப்புப்படம் 
இந்தியா

மேதைகளாக இருக்கிறார்கள்: மோடியை கிண்டலடித்த ராகுல் காந்தி

பிடிஐ

பிரதமர் மோடியை கிண்டலடித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கச்சா எண்ணெய் விலை குறைவின் பலன்களை மக்களுக்கு வழங்கிடுங்கள் என்றால் மேதைகள் கலால் வரியை உயர்த்திவிட்டார்கள் என்று கிண்டலடித்துள்ளார்

சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பேரல் 36 டாலராகக் குறைந்தது.

இதனால் பெட்ரோல், டீசல்விலையும் கடந்த ஒருவாரமாக சில பைசாக்கள் நாள்தோறும் குறைக்கப்பட்டு வந்தது. இதே நிலை நீடித்தால் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 8 ரூபாய் வரை குறையலாம் என்று கணக்கிடப்பட்டது.

ஆனால், திடீரென நேற்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 3 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த வரி உயர்வு மக்களைப் பாதிக்காது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தார்கள். இந்த வரி உயர்வால் அடுத்த நிதியாண்டு அரசுக்கு ரூ.39 ஆயிரம் கோடி கூடுதலாகக் கிடைக்கும்.

இருப்பினும், அந்த கச்சா எண்ணெய் விலைச் சரிவின் பலனை முழுமையாக மக்களுக்கு வழங்காமல் ஒவ்வொரு முறையும் மத்திய அரசு இதுபோன்ற கலால் வரியை உயர்த்தி தன்னுடைய கஜானாவை உயர்த்திக் கொள்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைக்கின்றனர்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும், கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையில் கூட, கச்சா எண்ணெய் விலைக் குறைவின் பலன்களை மக்களுக்கு வழக்கிடுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியதை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ட்விட்டரில் ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில் " கடந்த 3 நாட்களுக்கு முன், நான் பிரதமர் மோடிக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன். கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டது, அந்த விலைக் குறைவின் பலனை மக்களுக்கு வழங்கி பெட்ரோல், டீசல் விலையைக் குறையுங்கள் என்று தெரிவித்தேன்.

ஆனால், என்னுடைய அறிவுரையைக் கேட்பதற்குப் பதிலாக, நமது மேதைகள், என்ன செய்தார்கள் தெரியுமா, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திவிட்டார்கள்" எனக் கிண்டல் செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கச்சா எண்ணெய் விலை குறைந்தநிலையில் அதன் பலன்களை மக்களுக்கு வழங்காமல் கலால் வரியை உயர்த்தியது குறித்துக் கேட்டனர். அந்த கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார். இந்த வீடியோ காட்சியையும் ராகுல் காந்தி தனது ட்விட்டர்பக்கத்தில் இணைத்து வெளியிட்டார்

SCROLL FOR NEXT