நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஞாயிறன்று அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக 12 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸுக்கு இதுவரை கர்நாடகா, டெல்லியில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ்க்கு இதுவரை உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, நாடுமுழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
டெல்லியில் 7 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 11 பேரும், கர்நாடக மாநிலத்தில் 6 பேரும், மகாராஷ்டிராவில் 31 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். லடாக்கில் 3 பேரும், ஜம்மு காஷ்மீரில் 2 பேர் தெலங்கானாவில் 3 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது
ராஜஸ்தானில் 2 பேர், தமிழகம், ஆந்திரா, பஞ்சாப் மாநிலத்தில் தலா ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆக, நாட்டில் 17 வெளிநாட்டவர்கள் உள்பட 107 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் குறித்து மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. இந்தியாவில் சுகாதார அவசரநிலை ஏதும் ஏற்படவில்லை. ஆதலால் பதற்றப்பட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 93 பேருடன் தொடர்பு வைத்திருந்த 4 ஆயிரம் பேர் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்கள். நாடுமுழுவதும் 42 ஆயிரம் பேர் சமூக கண்காணிப்பில் உள்ளனர்.
கரோனா வைரஸைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் போதுமான அளவில் எடுக்கப்பட்டுள்ளது. சமூகரீதியான கண்காணிப்பு, தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்தும் வார்டு, போதுமான தடுப்பு கருவிகள், மருத்துவ ஊழியர்கள் என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் செய்யப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது