இத்தாலி நாட்டில் சிக்கி இருந்த 211 மாணவர்கள் உள்பட 218 இந்தியர்கள் பத்திரமாக மீட்டு இன்று காலை டெல்லி அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அடுத்த 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.
கரோனா வைரஸ் தாக்கம் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில் உள்ள இத்தாலி நாட்டில் கரோனா வைரஸ் தாக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
கரோனா வைரஸ் பரவும் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 15-ம் தேதிவரை வெளிநாட்டவர்களுக்கான சுற்றுலா விசா அனைத்தையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இதனால் இத்தாலியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அனைத்து கட்சிகளும், அங்குள்ள இந்தியர்களும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தனி விமானம் இத்தாலியில் உள்ள மிலன் நகருக்கு நேற்று இரவு புறப்பட்டது. அங்கு மிலன் நகரில் 211 மாணவர்கள் உள்பட 218 பேரைப் பத்திரமாக மீட்ட இந்திய அதிகாரிகள் இன்று காலை 9.45 மணி அளவில் டெல்லி வந்து சேர்ந்தனர்.
இவர்கள் அனைவரும் இந்திய- திபெத் எல்லைக்காவல் படையின் முகாமில் அடுத்த 14 நாட்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். அதன்பின் கரோனா வைரஸ் சோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிந்தபின் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி. முரளிதரன் ட்விட்டரில் கூறுகையில், " இத்தாலியின் மிலன் நகரில் இருந்து 211 மாணவர்கள் உள்பட 218 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு டெல்லி அழைத்துவரப்பட்டனர். இவர்கள் அனைவரும் அடுத்த 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவர். இந்தியர்கள் எங்கு துயரத்தில் இருந்தாலும் இந்திய அரசு அவர்களுக்கு உதவும். இத்தாலி அரசு தேவையான ஒத்துழைப்பு அளி்த்து உதவியதற்காக நன்றி தெரிவிக்கிறேன் " எனத் தெரிவித்தார்