குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அலிகரின் உப்பர்கோட்டில் பெண்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டத்தை கலைக்க கடந்த மாதம் 23-ம் தேதி அலிகர் போலீஸார் முயன்றனர். அப்போது, குடியுரிமை சட்ட ஆதரவாளர்களும் அங்கு போராட்டத்தில் இறங்கியதால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதில் முகமது தாரிக் முனவர் (25), முகமது இப்ராஹிம் (26) ஆகிய இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கி குண்டுகள் பட்டன.
இதில் முகமது தாரிக் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையாகவும் அளிக்கப்பட்டது.
இந்த கலவரத்தில் இருதரப்பைச் சேர்ந்த 37 பேர் மீது வழக்குகள் பதிவாகின. இதில் துப்பாக்கியால் சுட்ட குற்றச்சாட்டில் அலிகர் நகர பாஜக இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவமோர்ச்சாவின் முன்னாள் பொதுச்செயலாளரான வினய் வார்ஷ்னே (35), அவரது சகாக்களான சுரேந்திர யாதவ் மற்றும் திரிலோக்கி பிரசாத் ஆகியோர் மீது வழக்குகள் பதிவாகின. இதுதொடர்பான விசாரணையில், அலிகர் காவல்துறையினருக்கு கலவரம் தொடர்பான வீடியோ பதிவுகள் கிடைத்தன. இதில், பாபர்மண்டிவாசியான சுரேந்தர் யாதவ் என்பவரின் வீட்டு மாடியில் இருந்து வினய் வார்ஷ்னே துப்பாக்கியால் சுடுவதுதெரிந்தது. இந்த துப்பாக்கிக் குண்டுதான் தாரிக் மீது பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் வார்ஷ்னே மீது 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி வியாழக்கிழமை அவர்கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அதற்கு அடுத்த நாள் தாரிக் உயிரிழந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏட்டா சிறைக்கு வார்ஷ்னே மாற்றப்பட்டார். தாரிக்உயிரிழந்ததால் அலிகரின் மத்தியபடைகள் கூடுதலாக குவிக்கப் பட்டுள்ளன.
தமிழ் அதிகாரிக்கு பாராட்டு
டெல்லியின் ஷாஹீன்பாக்கை போல், அலிகரிலும் பல இடங்களில் பெண்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதில், ஷாஜாமால் எனும்ஒரு இடத்தை தவிர மற்ற இடங்களில் சாலைகளை மறித்து20 நாட்கள் நடந்த போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. இந்த சூழலில், பிப். 22-ல்முனிராஜ் என்ற தமிழர் புதிய மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரானார். ‘உபி சிங்கம்’ என்றழைக்கப்படும் இவர், பொறுப்பேற்ற இருவாரங்களில் தடியடி அல்லது கண்ணீர்புகை குண்டுகள் என எதுவும் இன்றி பேச்சுவார்த்தை நடத்தியே போராட்டத்தை கலைத்தார். இதையடுத்து முனிராஜுக்கு முதல்வர் ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.