கோவிட்-19 பாதிப்பு அச்சத்தால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்களின் வருகை மிக குறைவாக இருந்தது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதக் கடைசி நாளில் நடை திறக்கப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று முன்தினம் கும்ப மாதஇறுதி நாளில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடையைத் திறந்து பக்தர்களுக்கு விபூதிப் பிரசாதம் வழங்கினார். தொடர்ந்துமாளிகைப்புரத்து அம்மன் கோயிலை மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைத்தார்.
தற்போது கேரளாவில் கோவிட்-19 வைரஸ் பரவி வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி, திரையரங்கம், சுற்றுலாத் தளங்கள் மூடப்பட்டுள்ளன. ஐயப்பன் கோயிலுக்கு ஏராளமானோர் வந்தால், நோய்பரவல் அதிகரிக்கும் என்பதால் பக்தர்கள் கோயிலுக்கு வரவேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானத் தலைவர் வாசு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன்படி பம்பையில் உள்ளகடைகள், ரூம்கள் அடைக்கப்பட்ட துடன் சந்நிதானத்தில் பிரசாத ஸ்டால்களும் மூடப்பட்டிருந்தன. பம்பை வரை இயக்கப்படும் கேரளஅரசு பஸ்களும் இயக்கப்பட வில்லை. இருப்பினும், பக்தர்கள் சிலர் தங்கள் வாகனங்களில் ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்துக்கு வந்திருந்தனர்.
கூட்டம் இல்லாமல் இருந்ததால், வரிசையில் நிற்காமல் நேரடியாக சந்நிதானத்தை அடைந்து சில நிமிடங்களில் தரிசனம் முடித்துக் கிளம்பினர். அடுத்தடுத்து, பக்தர்கள் வராததால், நேற்று பகல் முழுவதும் கோயில் வளாகம் வெறிச்சோடிக் கிடந்தது.
கோயிலில் நிர்மால்ய தரிசனம், உச்ச பூஜை, சந்தனம், நெய் அபிஷேகம், கலசாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் எதுவும் நடைபெறவில்லை. வரும் 18-ம் தேதி மீண்டும் நடை சாத்தப்பட உள்ளது.