கோப்புப்படம் 
இந்தியா

கரோனா வைரஸ் தொற்று நோய் 'பேரிடர்': உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு; மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றை பேரிடராகக் கருத வேண்டும். இந்த நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவைப்படும் நிதியை மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து மாநில அரசுகள் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளார்கள். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 85 பேர் கரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றுக்கு விடுமுறை வழங்கி கர்நாடகா, மத்தியப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, கரோனா வைரஸ் நோய்த் தொற்றை உலக சுகாதார அமைப்பு பெருந்தொற்று நோயாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் மாநில அரசுகள் கரோனா வைரஸ் தொற்று நோயை, பேரிடராகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் மாநிலப் பேரிடர் தடுப்பு நிதியிலிருந்து நிதியை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதில் உயிரிழந்தவர்கள் எனப்படும்போது, மீட்புப் பணியில் ஈடுபடுவோர், மருத்துவப் பணியில் ஈடுபடுவோர் ஆகியோரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தாலும் அவர்களுக்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர சில விதிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் செலவு குறித்த மதிப்பீட்டை மாநில அரசுகள் மதிப்பிட வேண்டும்.

அடுத்த 30 நாட்களுக்குத் தேவையான நிதி, மதிப்பீடு உள்ளிட்டவற்றை மாநில உயர் மட்டக் குழு மூலம் கணக்கிட வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் அமைப்பது, படுக்கைகள் அமைப்பது, எத்தனை நாட்கள் முகாம்கள் செயல்படுவது போன்றவற்றை மாநில உயர் மட்டக் குழு முடிவு செய்யும்.

இதற்குத் தேவையான செலவுகளுக்குத் தேவையான நிதி மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து எடுத்துப் பயன்படுத்தலாம். தேசியப் பேரிடர் நிதியிலிருந்து எடுக்கக்கூடாது. இந்த நிதியைத் திறம்படப் பயன்படுத்தி, கரோனாவைக் கட்டுப்படுத்தும் கண்காணிப்பை மாநில உயர் மட்டக் குழு செய்யவேண்டும். உபகரணங்களுக்கான செலவு 10 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT