நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு கடந்த ஜனவரி மாதமே இரண்டு முறை வாரண்ட்டுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால், குற்றவாளிகள் தங்கள் சட்ட வாய்ப்புகளை பயன்படுத்தியதன் காரணமாக அவர்களை குறிப்பிட்ட தேதிகளில் தூக்கிலிட முடியவில்லை.
இதையடுத்து, குற்றவாளிகளுக்கான சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் அவர்களை மார்ச் 20-ம் தேதி தூக்கிலிடுமாறு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது.
இந்த சூழலில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
எனது மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனு கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி நிராகரிக்கப்பட்டது. முன்னதாக, எனது கருணை மனுவை நிராகரிக்குமாறு டெல்லி உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்திருந்தது. அந்தப் பரிந்துரையில் உள்துறை அமைச்சர் சத்யேந்தர் கையொப்பம் இல்லை.
இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தில் அப்போதே எழுப்பினோம். அதற்கு பதிலளித்த டெல்லி அரசு, அவரது கையொப்பத்தை வாட்ஸ் அப்பில் பெற்றதாக தெரிவித்தது. இதிலும் விதிமீறல் இருக்கிறது. அந்த சமயத்தில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும்போது, சத்யேந்தர் ஜெயின் எம்எல்ஏவாக மட்டுமே கருதப்படுவார். அப்படியிருக்கும் போது, அவர் எப்படி உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் இருந்து கையெழுத்திட முடியும்.
எனவே, இந்த விதிமீறல் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். மேலும், கருணை மனுவை வழங்க எனக்கு மற்றொரு வாய்ப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் வினய் சர்மா கூறியுள்ளார். - பிடிஐ