கர்நாடக முதல்வர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ 
இந்தியா

கரோனா பீதி: கர்நாடகாவில் ஷாப்பிங் மால், திரையரங்கு, திருமணம், விளையாட்டு, கண்காட்சிக்கு தடை: முதல்வர் எடியூரப்பா உத்தரவு

பிடிஐ

கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்கும் வகையில் கர்நாடக மாநிலம் முழுவதும் அடுத்த ஒரு வாரத்துக்கு பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், பப்புகள், நைட் கிளப்புகள், திருமணங்கள் உள்ளிட்ட அனைத்தும் நடத்தத் தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் 81 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 17 பேர் வெளிநாட்டவர்கள். இதில் கர்நாடக மாநிலம், கலாபுர்க்கியைச் சேர்ந்த ஒரு முதியவர் கரோனா வைரஸால் இறந்துள்ளார். இதுதான் கரோனா வைரஸால் முதல் உயிர் பலியாகும்.

இதனால் விழிப்படைந்த கர்நாடக அரசு இன்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதல்வர் எடியூரப்பா, அதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோருடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவும் தீவிரத்தைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதன்படி அடுத்த ஒரு வாரத்துக்கு பள்ளி, கல்லூரிகள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் வகுப்புகளுக்கு வழக்கம் போல் தேர்வு நடைபெறும். அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒருவாரத்துக்கு மூடப்படுகின்றன

மாநிலத்தில் செயல்படும் அனைத்து திரையரங்குகள், நைட் கிளப்புகள், பப்புகள், ஷாப்பிங் மால்கள் அடுத்த ஒருவாரத்துக்கு மூடப்படும். கண்காட்சிகள், கோடைகால பயிற்சி வகுப்புகள், திருமணங்கள், விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள் அனைத்தும் அடுத்த ஒரு வாரத்துக்கு ரத்து செய்யப்படுகின்றன.

மக்கள் யாரும் பெரும்பாலும் வெளியூர் பயணங்களைத் தவிர்த்தல் நல்லது. விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்கள் குறித்து அரசு சிறப்புக் கவனம் செலுத்தும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டில் இருந்து ஒரு வாரத்துக்குப் பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். இதை ஆலோசனையாகக் கூறுகிறோம்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், அரசு அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும். மக்கள் நலன் கருதித்தான் அனைத்து அதிகாரிகள், மருத்துவர்கள், மருத்துவ ஆய்வாளர்கள் ஆகியோருடன் ஆலோசித்த பின்புதான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒருவாரத்துக்குப்பின் அடுத்த கட்ட அறிவிப்பு வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்

இதற்கிடையே இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் சுதா மூர்த்தி நேற்று கர்நாடக அரசிடம் வலியுறுத்திய கோரிக்கையில் " குளிர்சாதன அறையி்ல்தான் கரோனா வைரஸ் வேகமாகப் பரவும். ஆதலால், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட வேண்டும். மருந்துக்கடைகள், மளிகைக்கடைகள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பவை மட்டுமே செயல்பட அனுமதிக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT