கரோனா வைரஸ் பீதி காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 119 நாடுகளில் 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 66 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கோவிட் -19 காய்ச்சலில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தியாவிலும் கரோனா ரைவஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கரோனா தொற்றால் ஏராளமான மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் விடுமுறை அளித்து வருகின்றன.
கோயில்களுக்கும் மக்கள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வருபவர்கள், இந்தியாவுக்கு வந்து 28 நாள்கள் இருந்த பின் தங்களின் உடல் நிலையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு திருப்பதிக்கு வர வேண்டும் என்று ஏற்கெனவே தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தினமும் லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற ஒரு தலமாக திருமலை - திருப்பதி விளங்குவதால் வெளிநாடு வாழ் பக்தர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டுமெனவும் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டது. இதுபோலவே கரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.
இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. வெளிநாட்டு பக்தர்கள் மட்டுமின்றி உள்நாட்டு பக்தர்களும் வருகையை தவிர்த்துள்ளனர். விரைவில் கோடை சீசன் தொடங்குவதால் ஏராளமான பக்தரகள் வரக்கூடும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து வந்தது. இந்த நிலையில் பக்தர்கள் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது.