இந்தியா

ஹரியாணாவில் சட்டத் திருத்தம்: கிராம பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் அதிகாரம்

ஆர்.ஷபிமுன்னா

ஹரியாணாவின் ‘பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1994’-ல் திருத்தம்செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பஞ்சாயத்துக்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங் கப்பட்டுள்ளது.

மக்களின் பிரச்சினைகளில் வித்தியாசமான முடிவுகள் எடுப்பதில் பிரபலமானது ஹரியாணா மாநில கிராமப் பஞ்சாயத்துகள். இதனால், ‘காப் பஞ்சாயத்து’ எனும் பெயரில் அழைக்கப்படும் இவற்றில் விதிக்கப்படும் அபராதங்களும் வியப்புக்குரியது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்குவதில் ஹரியாணாவின் கிராமப் பஞ்சாயத்துகள் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.இதில், பெண்கள் ஜீன்ஸ் அணியத்தடை, கைப்பேசிகள் பயன்படுத்தக் கூடாது என்பவை அடங்கும்.

இந்நிலையில், அங்கு ஜேஜேபி கட்சி ஆதரவுடன் ஆளும் பாஜக அரசு ‘பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1994’-ல் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவை அங்கீகாரத்துடன் வெளியாகி உள்ள ‘பஞ்சாயத்து ராஜ் திருத்தச் சட்டம் 2020’ -ல்ஹரியாணாவின் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி இனி, கிராமங்களின் குடிநீர்வசதி மற்றும் தெருவிளக்குகள் புகார்களின் மீது பஞ்சாயத்துகள் நடவடிக்கை எடுக்கும். குப்பைகளை அகற்றுதல், சுற்றுப்புறத் தூய்மை மீதான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பஞ்சாயத்துகள் செய்யும். முதியோர் கல்வி, பேரிடர்போன்றவற்றிலும் நடவடிக்கை எடுக்க பஞ்சாயத்துகளுக்கே முதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சமூக ஒற்றுமை, தனிநபர் திறமைகளை வெளிக்கொணர்தல், பண்டிகைக்கால விழாக்கள், கலாச்சார விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, இனி பஞ்சாயத்து அமைப்புகள் கிராமங்களை, குட்டி அரசாட்சி செய்யும் அளவிற்கு தன் செயல்பாடுகளை அதிகரிக்க உள்ளது. இது சமூகப் பிரச்சினைகளில் தலையிட்டு விதிக்கும் அபராதத் தொகையும் பத்து மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத் திருத்தத்தின்படி இனி ஹரியாணாவின் கிராமங்களில் நடைபெறும் தவறுக்கு பஞ்சாயத்துகள் ரூ.100 என்பதற்கு பதிலாக ரூ.1000 வரை அபராதத் தொகை விதிக்கலாம்.

கிராமப் பஞ்சாயத்தின் முடிவைஎதிர்த்து மேல்முறையீடு செய்யபொதுமக்கள் அதன் அமர்வு நீதிமன்றங்களை அணுகவும் சட்டத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஹரியாணாவின் கிராமப் பஞ்சாயத்து தீர்ப்புகளை எதிர்த்துமேல்முறையீடு செய்ய வழி இல்லாமல் இருந்தது. இத்துடன் புதிதாகக் கூடும் கிராமப் பஞ்சாயத்தின் பதவிக் காலம் ஐந்துவருடங்கள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT