அர்பிதா சவுத்ரி 
இந்தியா

டிக்டாக் வீடியோவால் சஸ்பெண்டான பெண் போலீஸுக்கு குவியும் பட வாய்ப்பு

செய்திப்பிரிவு

டிக்டாக் வீடியோவால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் போலீஸுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

குஜராத்தை சேர்ந்த பெண் போலீஸ் அர்பிதா சவுத்ரி. அந்த மாநிலத்தின் மெஹ்சானா மாவட்டம், லங்நாஜ் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அவர் கடந்த 2019 ஜூலையில் பணியில் இருக்கும்போது லாக்அப் அறை முன்பு ஆடி, பாடி 'டிக்டாக்' வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோவால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதன்பின் மீண்டும் பணியில் சேர்ந்த அவர் தற்போது மெஹ்சானா மாவட்டம், காதி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலத்தில் டிக்டாக்கில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டார். பணியில் சேர்ந்த பிறகும் 'டிக்டாக்' சேவையை தொடர்ந்தார்.

'டிக்டாக்' மூலம் குஜராத் மட்டுமன்றி வடமாநிலம் முழுவதும் அர்பிதா சவுத்ரி மிகவும் பிரபலமாகிவிட்டார். கடந்தஆண்டு செப்டம்பரில் வெளியான குஜராத்தி இசை ஆல்பத்தில் அவர் நடித்தார். அந்த ஆல்பம் லட்சக்கணக்கானோரை சென்றடைந்தது. அடுத்தடுத்து 4 இசைஆல்பங்களில் அவர் நடித்துள்ளார்.

காவல், கலை பயணம் குறித்து அர்பிதா சவுத்ரி கூறியதாவது:

நான் போலீஸ் ஆக வேண்டும் என்பது எனது தந்தையின் ஆசை.அவரது ஆசையை நிறைவேற்றிவிட்டேன். அதேநேரம் நடிகை, மாடல், பாடகியாக வேண்டும் என்றுசிறுவயது முதலே கனவு கண்டு வருகிறேன். அந்த கனவை கைவிடமுடியாது. ஒரு கனவுக்காக இன்னொரு கனவை விட்டுக் கொடுக்க முடியாது.

காக்கி உடையில் இருந்தாலும் எனது கலைப்பயணம் தொடரும். `டிக்டாக்' மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளேன். நான் எங்கு சென்றாலும் என்னுடன் செல்பி எடுக்க ரசிகர்கள் விரும்புகின்றனர். இதுவரை 4 இசை ஆல்பங்களில் பங்கேற்றுள்ளேன்.

தற்போது குஜராத்தி திரைப்படங்களில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வருகின்றன. நடிப்பதற்காக மேலதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளேன். அவர்கள் அனுமதி வழங்கிய பிறகு திரைப்படங்களில் நடிப்பேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT