முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ 
இந்தியா

கரோனா அச்சம்: மார்ச் 31 வரை டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; திரையரங்குகளை மூட அரசு உத்தரவு

பிடிஐ

கரோனா வைரஸை தொற்று நோய் என அறிவித்துள்ள டெல்லி அரசு, வரும் 31-ம் தேதிவரை தேர்வு நடைபெறும் வகுப்புகள் தவிர அனைத்து பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை அறிவித்துள்ளது. திரையரங்குகள் அனைத்தும் 31-ம் தேதிவரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகளவில் கரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகளவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 76 பேர் வரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 31-ம் தேதிவரை விடுமுறை அறிவித்துள்ளது.

முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், முக்கிய உயர் அதிகாரிகள் ஆகியோர் இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகளை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நிருபர்களிடம் அறிவித்தார்

அப்போது அவர் கூறியதாவது:

அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பொது மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் என அனைத்தையும் கண்டிப்பாகத் தொற்று இல்லாத இடமாக மாற்றவேண்டும்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தும் விதத்தில் டெல்லி நகரக் குடியிருப்புகளில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு 500 படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் உள்ள அனைத்து திரையரங்குகளும் வரும் மார்ச் 31-ம் தேதிவரை மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் வகுப்புகளைத் தவிர அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வரும் 31-ம் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் என்பது தொற்றுநோய் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொடர்பாக நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கை அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைவரும் ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறோம். உலகம் முழுவதிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாம் எச்சரிக்கையாக இருந்தால், நாம் கரோனாவிலிருந்து உறுதியாக தப்பிக்கலாம்" எனத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT