கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் வெங்கேரி மற்றும் மேற்கு கோடியதூரில் உள்ள இரண்டு கோழி பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்ட ஒரு வாரத்திற்குள், 47 கி.மீ தூரத்தில் உள்ள மலப்புரத்தில் இந்த பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலப்புரம் மாவட்டத்தில் பரப்பங்கடியில் உள்ள பாலிங்கலில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு கி.மீ சுற்றளவில் கோழிகளை அழிக்கும் நடவடிக்கைகள் சனிக்கிழமை முதல் தொடங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஜாஃபர் மாலிக் தெரிவித்தார். இதுகுறித்த செய்திகள் கேரள ஊடகங்களிலும் தெரிவிக்கப்படுகின்றன.
மலப்புரத்தில் மாவட்ட கால்நடை பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் ஊராட்சி அமைப்புகளின் அதிகாரிகளின் அவசரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:
ஒரு சில கோழிகள் இறந்து கிடந்ததை அடுத்து பண்ணை முழுவதுமாக பரவியதாக சந்தேகித்த விலங்குகள் பராமரிப்பு அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பண்ணையிலிருந்து உள்ளுறுப்பு மாதிரிகள் சேகரித்து போபாலின் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்க்கான தேசிய நிறுவனத்தில் விசாரணைக்கு அனுப்பினர், சோதனையில் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதற்கிடையில், கடந்த சனிக்கிழமையன்று கோழிக்கோட்டில் பறவைக் காய்ச்சல் பரவியது கண்டறியப்பட்ட இரண்டு பண்ணைகளில் ஒரு கி.மீ சுற்றளவில் கோழிகளை அழித்தல் மற்றும் கிருமி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பறவைக் காய்ச்சல் நோய் அதன் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்துவிட்டது. தற்போது மலப்புரத்திற்கு பரவியுள்ளது.
நோய்த் தாக்கம் ஏற்பட்ட மையப்பகுதியிலிருந்து ஒரு கி.மீ தூரத்திற்குள் உள்ள அனைத்துப் பறவைகள் மற்றும் செல்லப் பிராணிகளும் சிறப்பு பணிக்குழுவால் அழிக்கப்பட்டது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.