மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரின் கடைசி மன்னர் ஜிவாஜிராவ் சிந்தியாவின் மகன் மாதவராவ் சிந்தியா. 1971-ல் ஜன சங்கம் சார்பில் குவாலியர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
அப்போது அவருக்கு வயது 26. குணா தொகுதியில் 1977 தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். 1980-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மீண்டும் குணா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மாதவராவ் சிந்தியா, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் அரசில் அமைச்சராக பதவி வகித்தார்.
இந்நிலையில், 1996-ம் ஆண்டு ஜெயின் ஹவாலா டயரியில் மாதவராவ் சிந்தியா பெயர் இடம்பெற்றிருந்தது. அரசியல்வாதிகள் பலருக்கு சட்டவிரோதமாக பெரும் தொகை வழங்கியது தொடர்பான தகவல் அந்த டயரியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, 1996 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.
1971 முதல் தான் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் மாதவராவ் வெற்றி பெற்று வந்தார். இந்நிலையில் தனக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். மத்திய பிரதேச விகாஸ் காங்கிரஸ் கட்சியை தொடங்கிய அவர் குவாலியர் தொகுதியில் போட்டியிட்டு 7-வது முறையாக வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாஜக அரசு 13 நாட்களில் கவிழ்ந்தது. இதையடுத்து, ஐக்கிய முன்னணி சார்பில் தேவ கவுடா பிரதமரானார். இந்த கூட்டணி அரசுக்கு சிந்தியா ஆதரவளித்தார். இந்நிலையில் 2 ஆண்டுக்குப் பிறகு தனது கட்சியை காங்கிரஸில் இணைத்தார் மாதவராவ் சிந்தியா. காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற சோனியாவின் ஆலோசகராக இருந்தார். 2001-ல் நிகழ்ந்த விமான விபத்தில் மாதவராவ் உயிரிழந்தார்.
இந்நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் காங்கிரஸிலிருந்து விலகி உள்ளார். ஆனால், தந்தை தனிக்கட்சி தொடங்கிய நிலையில் மகன் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.