நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதனன்று தொடங்கியது. டெல்லி வன்முறை குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
அப்போது அவர் கலவரங்கள் டெல்லியின் மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் டெல்லி போலீஸ் தடுத்ததாகப் பாராட்டினார், மேலும் டெல்லி வன்முறை குறித்து அவரவர் வார்த்தைகளில் விவரித்தார்கள் என்றார் அதோடு டெல்லி கலவரத்தில் பலியானோருக்கு தன் இரங்கலையும் வெளியிட்டார் அமித் ஷா.
அவர் பேசியதாவது, “கலவரத்தின் போது போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று என்னிடம் கேட்கின்றனர். கலவரம் ஏற்பட்ட பகுதியில் மக்கள் தொகை 20 லட்சம். 1.7 கோடி டெல்லி மக்கள் தொகையில் பிற இடங்களுக்கும் பரவாமல் தடுத்த டெல்லி போலீஸை நான் பாராட்டுகிறேன்.
கலவரங்கள் பற்றிய முதல் தகவல் பிப்ரவரி 24ம் தேதி மதியம் 2மணியளவில் கிடைத்தது. கடைசி அழைப்பு 25ம் தேதி இரவு மணி 11க்கு வந்தது. டெல்லி போலீஸ் 36 மணி நேரத்தில் வன்முறைகளை அடக்கினர்.
நீங்கள் என் மீது கேள்விகள் எழுப்பலாம், ட்ரம்ப் வருகையில் நான் ஈடுபட்டிருந்தேன் என்று கூறலாம் அதுவும் திட்டமிடப்பட்டதுதான், என் வருகையும் திட்டமிடப்பட்டதுதான் ஏனெனில் அது என் தொகுதி. நான் டெல்லிக்கு மாலை 6.30 மணிக்கு வந்தேன். தாஜ்மகாலுக்குச் செல்லவில்லை, மதிய உணவு விருந்திலும் கலந்து கொள்ளவில்லை. ட்ரம்புக்காக அளிக்கப்பட்ட இரவு விருந்திலும் நான் கலந்து கொள்ளவில்லை. பதற்றத்தை தணிக்க டெல்லி போலீஸுடன்தான் இருந்தேன்.
என்.எஸ்.ஏ.யின் அஜித் தோவலிடம் போலீஸாருக்கு ஊக்கமளிக்கும் படி கேட்டுக் கொண்டேன். நான் ஏன் போகவில்லை எனில் போலீஸ் படையை என் மீதுள்ள கவனத்தினால் விரயம் செய்ய விரும்பவில்லை.
கலவரங்கள் ஏன் பரவின-61 சதுர கிமீ பரப்பளவில் அடர்த்தியான மக்கள் தொகை. போலீஸ் மற்றும் துப்பாக்கிப் படையினர் அங்கு செல்ல முடியாது. வடகிழக்கு டெல்லி மதக்கலவரங்களுக்கான வரலாறு கொண்டது. மேலும் அது உ.பி.எல்லைக்கருகே இருக்கிறது. இன்றும் கூட 80 துணை ராணுவப்படையினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
பிப்.27ம் தேதி முதல் 700 முதல் தகவலறிக்கைகள் பதியப்பட்டுள்ளன. 2,647 பேர் தடுப்புக் காவல்/ கைது செய்யப்பட்டுள்ளனர். 25 கணினிகளில் சிசிடிவி பதிவுகள் ஆராயப்பட்டு வருகின்றன. மென்பொருளுக்கு மதம் கிடையாது. வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், முக அடையாளம் காட்டும் மென்பொருளுக்காக பிற விவரங்கள் இருந்தன இதைக் கொடு 1,100 பேர் அடையாளம் காணப்பட்டன. இதில் 300 பேர் உ.பி.யிலிருந்து வந்தவர்கள். உ.பியும் தரவு அனுப்பியது. இது மிகப்பெரிய அளவிலான சதி, 40 குழுக்கள் உருவாகியுள்ளன.
குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய அளவில் கலவரம் நிகழ்வதென்பது சதித்திட்டம் இல்லாமல் நிகழ சாத்தியமில்லை. இந்தக் கோணத்திலிருந்தும் நாங்கள் பார்க்கிறோம்.
எத்தனை முஸ்லிம்கள், இந்துக்கள் கலவரத்தில் பலியானார்கள் என்று நாங்கள் பார்க்கவில்லை. 52 இந்தியர்கள் பலியானார்கள் என்றே பார்க்கிறேன்.
நரேந்திர மோடி அரசு காரணமானவர்களைச் சும்மா விடாது. அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. 2 எஸ்.ஐ.டி.க்கள் 49 சீரியஸ் கேஸ்களை விசாரிப்பார்கள். கலவரத்தில் பயன்படுத்தப்பட்ட 152 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அமைதிக்குழு கூட்டம் மட்டும் இதுவரை 600 நடந்துள்ளன. தனியாக சதி வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது” என்றார் அமித் ஷா.