பிரதிநதித்துவப்படம் 
இந்தியா

மக்களவையில் அமளி: காங்கிரஸ் எம்.பிக்கள் 7 பேர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு நீக்கம்

பிடிஐ

மக்களவையில் அமளியில், அவமரியாதைக் குறைவாகவும் நடந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மீதான தடை உத்தரவு இன்று திரும்பப்பெறப்பட்டது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கவுரவ் கோகய், டிஎன். பிரதாபன், டீன் குரியகோஸ், ஆர். உன்னிதான், மாணிக்கம் தாகூர், பென்னி பெஹ்னன், குர்ஜீத் சிங் அஜுலா ஆகியோர் கடந்த 5-ம் தேதி சஸ்பெண்ட் செய்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்

மக்களவையில் டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும், உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் நாடாளுமன்ற 2-வது அமர்வு தொடங்கியதிலிருந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதில் உச்ச கட்டமாக காங்கிரஸ்கட்சியின் 7 எம்.பி.க்கள் கவுரவ் கோகய், டிஎன். பிரதாபன், டீன் குரியகோஸ், ஆர். உன்னிதான், மாணிக்கம் தாகூர், பென்னி பெஹ்னன், குர்ஜீத் சிங் அஜுலா ஆகியோர் அவையில் ஒழுக்கக்குறைவாகவும், அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால், அவர்களை பட்ஜெட் கூட்டத் தொடரில் சஸ்பெண்ட் செய்து மக்களவைத் தலைவர் உத்தரவிட்டார்.

காங்கிரஸ் எம்.பி.க்களை மீண்டும் அவையில் சேர்க்க வேண்டும், சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததது.

இதையடுத்து, இன்று மக்களவை கூடியதும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்பால், சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார், அனைத்து எம்.பி.க்கள் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது. இதையடுத்து, 7 எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு நீக்கப்பட்டது.

அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில் " உண்மையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் நடந்து கொண்டவிதம் வேதனையளித்தது. சில உறுப்பினர்கள் அவையில் மார்ஷல்களிடம் இருந்து காகிதங்களைக் கிழித்து வீசி எறிந்தது, பதாகைகளைக் காட்டி கோஷமிட்டது போன்றவை எல்லை மீறிய செயலாகும்.

இந்த அவையில் மாறுபட்ட விஷயங்களை ஏற்கலாம், விவாதிக்கலாம், கிண்டல் அடிக்கலாம். ஆனால் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் மீது மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதையும், இந்த அவையில் மாண்பையும் காப்பதும் அவசியம்" எனத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT