தற்கால அரசியலில் ‘கொள்கை’ என்பது செத்து மடிந்து விட்டது என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா மத்தியப் பிரதேச காங்கிரசின் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தது பற்றி விமர்சித்துள்ளார், ஆனால் அதே வேளையில் இது போன்று ஒன்று இனி நடக்காதவாறு கட்சித் தலைமை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்ததும் 21 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைமை ஆட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு ராஜ்யசபா பதவியும் முடிந்தால் பிற்பாடு மத்திய அமைச்சர் பதவியும் பாஜகவில் சேர்ந்ததையடுத்து காத்திருக்கிறது.
இந்நிலையில் தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு பிரதாப் சிங் பாஜ்வா கூறும்போது, “சிந்தியாவுக்கு என்னவாயிற்று என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை, ஆனால் தற்கால அரசியலில் கொள்கை செத்து மடிந்து வருகிறது. யாரும் கொள்கைப் பிடிப்புடன் இருப்பதில்லை, கட்சிகளாக இருந்தாலும் சரி, அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி.
சிந்தியாவை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம், அவர் ஒரு படித்த இளம் தலைவர், காங்கிரஸுக்கு இது பேரிழப்புத்தான். இனிமேலாவது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், மைய நீரோட்டத் தலைவர்கள் இவ்வாறு கட்சியிலிருந்து வெளியேற அனுமதிக்கக் கூடாது. இந்தப் பிரச்சினை வரும்போதே கட்சியின் பொதுச் செயலாளர்களுக்கு ஏன் தெரியாமல் போனது.
இதே நிலைமை பஞ்சாப் காங்கிரஸ் தலைமை அமரீந்தருக்கும் ஏற்படும். தங்கள் நலன்கள் கட்சியில் பாதுகாக்கப்படவில்லை என்று உணரும் தலைவர்களுடன் கட்சி நேரடித் தொடர்பில் இருப்பது அவசியம்” என்றார் பாஜ்வா.