பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் விலகினேன் என்பதற்கான காரணங்களை விளக்கியுள்ளார்.
மத்தியப் பிரதேச காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும், முதல்வர் கமல்நாத்துடன் ஏற்பட்ட மோதல் போக்காலும் கட்சியிலிருந்து நேற்று விலகினார். தனது ராஜினாமா கடிதத்தையும் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு சிந்தியா அனுப்பினார்.
ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் விலகியதால், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று டெல்லியில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியைரைச் சந்தித்து சிந்தியா பேசினார்.
இதையடுத்து,18 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்து இன்று பாஜகவில் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் ஜோதிராதித்ய சிந்தியா இணைந்தார்.
அப்போது ஜோதிராதித்ய சிந்தியா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் விலகினேன் என்பதற்கான 3 முக்கியக் காரணங்களை அடுக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
''நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதற்கு முதல் காரணம் ஏமாற்றம்தான். காங்கிரஸ் கட்சி புதிய தலைமையை வரவேற்கவில்லை. ஒரு மந்தமான சூழல்தான் கட்சியில் நீடித்தது. எந்தவிதமான பிரச்சினையையும் அடையாளப்படுத்தினாலும் அதைக் கட்சி ஏற்கவில்லை. குறிப்பாகக் கட்சியில் உள்ள வயதானவர்கள், மூத்த தலைவர்கள் (குறிப்பாக திக்விஜய் சிங், கமல்நாத்) பெரும் இடையூறாக இருக்கிறார்கள்.
2-வது காரணம், மத்தியப் பிரதேச அரசில் நிலவும் ஊழல் முக்கியமானது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மத்தியப் பிரேதசத்தை தொழிலில் சிறந்த மாநிலமாக மாற்றக் கனவு கண்டோம். தொழிற்சாலையை மேம்படுத்தத் திட்டமிட்டோம். ஆனால் 18 மாதங்களில் அந்தக் கனவு தகர்ந்துவிட்டது. விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி அளிக்க முடியவில்லை. இயற்கையால் பயிர்கள் சேதமடைந்ததற்கு பயிர்க் காப்பீடும் வழங்க முடியவில்லை. மான்டசூர் சம்பவத்துக்கு இன்னும் விவசாயிகள் பலர் நீதிமன்றத்தில் வழக்கைச் சந்தித்து வருகிறார்கள்.
மூன்றாவது காரணம், பிரதமர் மோடியின் தலைமையை விரும்ப பாஜகவுக்கு வந்தேன். இப்போது பிரதமர் மோடியின் கரங்களில் தேசத்தின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது''.
இவ்வாறு ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்