காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா ஆகியோர் பேசிய வெறுப்புப் பேச்சுக்கு எதிராக நடவடிக்கை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட வகுப்புக் கலவரத்தில் அடைந்த சேதம் தொடர்பாக மதிப்பீடு செய்யச் சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும், வெறுப்புப் பேச்சு பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தீபக் மந்தன் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :
''டெல்லி வடகிழக்குப் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அது கலவரமானது. இதில் 56 பேர் உயிரிழந்தனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தக் கலவரத்துக்குத் தூண்டுகோலாக அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சு அமைந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சல்மான் குர்ஷித், பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா ஆகியோர் மக்களிடம் வெறுப்பை ஊட்டும் வகையில் பேசியுள்ளனர்.
இவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும். அந்தச் சொத்துகளை விற்பனை செய்து கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.
அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சு அவதூறாக மட்டுமல்லாது, இயற்கையில் மக்களைத் தூண்டிவிடும் விதத்தில் இருந்தது. மக்களிடம் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய தலைவர்கள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய போலீஸார் பார்வையாளர்களாகவே அங்கு இருந்தார்கள். இதுவரை டெல்லி போலீஸாரும் அரசியல் தலைவர்கள் மீது எவ்விதமான வழக்கும் பதிவு செய்யவில்லை. ஆதலால், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடவேண்டும்".
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.