சொகுசு பஸ்ஸில் போபால் விமானநிலையம் அழைத்துச் செல்லப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள்: படம் | ஏஎன்ஐ. 
இந்தியா

ஆட்சியைக் காப்பாற்ற தீவிரம்: மத்தியப் பிரதேசத்தின் 95 எம்எல்ஏக்களை ஜெய்ப்பூர் அனுப்பும் காங்கிரஸ் கட்சி

பிடிஐ

மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ள அரசியல் குழப்பத்தையடுத்து 95 எம்எல்ஏக்களையும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்குப் பாதுகாப்பாக அனுப்பும் பணியில் காங்கிரஸ் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக 95 எம்எல்ஏக்களும் சொகுசு பஸ்கள் மூலம் போபால் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு 120 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. முதல்வர் பதவி கிடைக்காததால் ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அதிருப்தி அடைந்தனர். இந்த சூழலைப் பயன்படுத்தி 107 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள பாஜக ஆட்சியைக் கைப்பற்ற முயன்றது.

இதையடுத்து ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் நேற்று பதவி விலகினர். இந்த 22 எம்எல்ஏக்களும் பெங்களூரு சொகுசு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

228 உறுப்பினர்கள் கொண்ட மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் 22 எம்எல்ஏக்கள் பதவி விலகியுள்ளனர். இதனால் 206 என்ற பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை சரிந்துவிட்டது. தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 104 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் காங்கிரஸ் கட்சியிடம் 95 எம்எல்ஏக்களும், பாஜகவிடம் 107 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் எம்எல்ஏக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதால், தற்போது இருக்கும் 95 எம்எல்ஏக்களையும் பாதுகாக்கும் முயற்சியில் காங்கிரஸ் அரசு ஈடுபட்டுள்ளது.

இதையடுத்து, 95 எம்எல்ஏக்களையும் விமானம் மூலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அனுப்ப காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 95 எம்எல்ஏக்களும் போபால் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஆனால், பெரும்பான்மைக்கு இன்னும் காங்கிரஸ் கட்சிக்கு 10 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழல் ஏற்படும்போது ஜோதிராதித்ய சிந்தியாவிடம் இருக்கும் எம்எல்ஏக்கள் 12 பேர் ஆதரவு தெரிவிப்பார்கள் எனக் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்தியப் பிரதேச அமைச்சர் கமலேஸ்வர் படேல் நிருபர்களிடம் கூறுகையில், "சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிப்போம். ஜோதிராதித்யா சிந்தியாவுடன் இருக்கும் எம்எல்ஏக்களில் 12 பேர் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். முதல் முறையாக இதுபோன்று நடக்கவில்லை. பலமுறை இதுபோல் நடந்துள்ளது. நாங்கள் அனைவரும் ஜெய்ப்பூர் செல்கிறோம். தற்போது 95 எம்எல்ஏக்கள் உள்ளனர். சுயேச்சை எம்எல்ஏக்கள், பிஎஸ்பி, சமாஜ்வாதி எம்எல்ஏக்களும் ஆதரவு தருவார்கள்" எனத் தெரிவித்தார்.

மற்றொரு அமைச்சர் பிரியவாரத் சிங் கூறுகையில், "சிந்தியாவுடன் இருக்கும் எம்எல்ஏக்களில் 12 பேர் தவறான வழிகாட்டலில் அங்கு தங்கியுள்ளார்கள். பெரும்பான்மையை நிரூபிக்கும்போது நிச்சயம் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT