மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமாவைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இப்பிரச்சினையை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாநிலங்களவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
டெல்லியில் வகுப்புவாத வன்முறை மற்றும் கலவரத்தை ஒளிபரப்பியதாக இரண்டு மலையாள செய்தி சேனல்களுக்கு அரசாங்கம் தடை விதித்தது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கியதும் இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
ஆசியா நெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன் தொலைக்காட்சிக்கு 48 மணிநேர ஒளிபரப்புத் தடை விதிக்கப்பட்டது குறித்து இடதுசாரிக் கட்சிகள் கேள்வி எழுப்பிய அதேவேளையில், தேசியத் தலைநகரில் சமீபத்திய வகுப்புவாத வன்முறை பிரச்சினையைப் பற்றி திரிணமூல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து வியாழக்கிழமை காலை விவாதிக்கப்படும் என்று மாநிலங்களவைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து பிரச்சினையை எழுப்பினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பினாய் விஸ்வாம் டெல்லி வன்முறையைப் பற்றி கடந்த வாரம் செய்தி சேனல்களுக்குத் தடை விதித்த பிரச்சினையை எழுப்பினார். அதற்குப் பதிலளித்த வெங்கய்ய நாயுடு, தடை நீக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். அதேநேரம் மீடியா ஒன் தடை செய்யப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு டெல்லி காவல்துறை மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை விமர்சித்ததைப் பற்றிக் கூறினார்.
மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகிய பின்னர் கட்சியின் அரசாங்கம் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசியல் நிகழ்வுகளை எழுப்பினர்.
சில காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியப் பிரதேசத்தில் நடந்த சம்பவங்களை எழுப்பினர். மத்தியப் பிரதேசப் பிரச்சினைகளை எழுப்பக் கூடியவர்கள் நாடாளுமன்ற விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெங்கய்ய நாயுடு கூறினார்.
இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச எம்.பி. ஒருவர் மீறி கேள்வி எழுப்பியதால், அவர் நாள் முழுவதும் அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்படுவதாக வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார். இதனால் மேலும் சிலர் அப்பிரச்சினையை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் மாநிலங்களவையைத் தொந்தரவு செய்ய முயற்சித்ததாக அவைக்குறிப்பில் பதிவு செய்யப்படும் என்று வெங்கய்ய நாயுடு கூறினார். அதன்பிறகு, அவர் நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.