மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை என பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் கடந்தமுறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பகுஜன் சமாஜ் 2, சமாஜ்வாதி 1, சுயேச்சை 4 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு 120 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. இந்நிலையில் முதல்வர் பதவி கிடைக்காததால் ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அதிருப்தி அடைந்தனர். இந்த சூழலை பயன்படுத்தி 107 எம்எல்ஏ-க்களைக் கொண்டுள்ள பாஜக ஆட்சியை கைப்பற்ற முயற்சித்தது.
இதன் தொடக்கமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் சிலரை ஹரியாணாவின் குருகிராமில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து 8 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவப் போவதாக தகவல் வெளியானது.
சில எம்எல்ஏ-க்கள் மத்திய பிரதேசத்துக்கு திரும்பினர். ஆட்சிக்கு ஆபத்து இல்லை என கமல்நாத் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய பிரதேச அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் நேற்று பெங்களூரு சென்றுள்ளனர். அவர்களை தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்காமல் யாருக்கும் தெரியாத இடத்தில் பண்ணை வீட்டில் ரகசியமாக தங்க வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது.
பெங்களூருவில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 19 எம்எல்ஏக்களும் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் ஆவர். இதையடுத்து மத்திய பிரதேசத்தில் சில அமைச்சர்களை பதவி விலகச் செய்து ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களுக்கு பதவி வழங்க காங்கிரஸ் தலைமை முன்வந்துள்ளது. இதற்கு ஏதுவாக அம்மாநிலத்தில் 19 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். இதனால் மத்திய பிரதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:
‘‘இது காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரம். இதுபற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை. காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை.
அதேசமயம் இந்த அரசு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனை தீர்க்க வேண்டியது அந்த கட்சி தான். முதல்வர் கமல்நாத்தின் தலைமைக்கு எதிராக அக்கட்சியில் ஒரு பிரிவினர் அணிதிரள்கின்றனர்.’’ என சவுகான் கூறினார்.
முன்னதாக ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மாதவராவ் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு சவுகான் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.