நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா நேற்று புதியதாக கருணை மனு தாக்கல் செய்துள்ளார்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் அக் ஷய் குமார், பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா ஆகிய நால்வரை மார்ச் 20-ல் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது.
டெல்லி நீதிமன்றம் இந்த உத்தரவை 4-வது முறையாக பிறப்பித்துள்ளது. குற்றவாளிகள் நிவாரணம் பெறுவதற்கான சட்ட வாய்ப்புகள் முழுமை பெறாததால் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட 3 உத்தரவுகளும் தள்ளி வைக்கப்பட்டன.
இந்நிலையில் வினய் சர்மா சார்பில் டெல்லி துணை நிலை ஆளுநரிடம் புதிய கருணை மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் அவர் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என கோரியுள்ளார்.