கமல்நாத் 
இந்தியா

மத்திய பிரதேச கூட்டணி அரசுக்கு நெருக்கடி; காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் பெங்களூருவில் முகாம்: ஜோதிராதித்ய சிந்தியா மீது கட்சி மேலிடத்தில் முதல்வர் கமல்நாத் புகார்

செய்திப்பிரிவு

இரா.வினோத்

மத்திய பிரதேச அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர்பெங்களூருவில் ரகசிய இடத்தில் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் பின்னணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா இருப்பதாக சந்தேகிக்கும் அம்மாநில முதல்வர் கமல்நாத் அவருக்கு எதிராக காங்கிரஸ் மேலிடத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பகுஜன் சமாஜ் 2, சமாஜ்வாதி 1, சுயேச்சை 4 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு 120 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. இந்நிலையில் முதல்வர் பதவி கிடைக்காததால் ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அதிருப்தி அடைந்தனர். இந்த சூழலை பயன்படுத்தி 107 எம்எல்ஏ-க்களைக் கொண்டுள்ள பாஜக ஆட்சியை கைப்பற்ற முயற்சித்தது.

இதன் தொடக்கமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் சிலரை ஹரியாணாவின் குருகிராமில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து 8 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவப் போவதாக தகவல் வெளியானது.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், “மத்திய பிரதேச பாஜக மூத்த தலைவர் நரோத்தம் மிஸ்ரா கையில் பண பெட்டியுடன் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பேரம் பேசியுள்ளார். பாஜகவுக்கு வரும் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களுக்கு ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை கொடுப்பதாக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளார்” என குற்றம்சாட்டினார்.

இதனிடையே, சில எம்எல்ஏ-க்கள் மத்திய பிரதேசத்துக்கு திரும்பினர். ஆட்சிக்கு ஆபத்து இல்லை என கமல்நாத் தெரி வித்தார்.

இந்நிலையில், மத்திய பிரதேச அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் நேற்று பெங்களூரு சென்றுள்ளனர். அவர்களை தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்காமல் யாருக்கும் தெரியாத இடத்தில் பண்ணை வீட்டில் ரகசியமாக தங்க வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த செய்தியை உறுதிப்படுத்த முடியாத நிலையில் மத்திய பிரதேச அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் தனி விமானம் மூலம் பெங்களூரு பழைய விமான நிலையத்தில் தரையிறங்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்தவர்களின் பட்டியலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜ்வர்தன் சிங், கிரி ராஜ், ரக் ஷா, புருஷோத்தம் பிரஷாந்த் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து பாஜக வட்டாரத்தினர் கூறும்போது, “பெங்களூருவில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 19 எம்எல்ஏக்களும் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் ஆவர். அதில் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் துள்சி சிலாவத், தொழில் துறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா, போக்குவரத்து துறை அமைச்சர் கோவிந்த் சிங் ராஜ்புத் உட்பட 6 அமைச்சர்கள் உள்ளனர். சில மூத்த எம்எல்ஏக்களும் உள்ளனர்” என்றனர்.

மத்திய பிரதேச எம்எல்ஏக்கள் 19 பேர் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள காங்கிரஸ் மேலிடம் முதல்வர் கமல்நாத்தை டெல்லி அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளது. அப்போது அவர் அதிருப்தி எம்எல்ஏக்களின் பின்னணியில் ஜோதிராதித்ய சிந்தியா இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.

இதனால் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் டெல்லியில்ஜோதிராதித்ய சிந்தியாவிடம் பிரச்சினையை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT