ம.பி.அமைச்சர் உமங் சிங்கர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது.| 
இந்தியா

மத்தியப் பிரதேச அரசியல் குழப்பம்: 16 அமைச்சர்கள் ராஜினாமா - ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி- காங். கடும் குற்றச்சாட்டு 

செய்திப்பிரிவு

மத்திய பிரதேச கமல்நாத் தலைமை காங்கிரஸ் அரசின் 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து அமைச்சரவையை விரிவாக்கம் செய்யுமாறு முதல்வர் கமல்நாத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உள்துறை அமைச்சர் பாலா பச்சன், நிதியமைச்சர் தருண் பனாட், சட்ட அமைச்சர் சர்மா, ஆகிய அமைச்சர்கள் உட்பட 16 அமைச்சர்கள் நேற்று இரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தங்கள் ராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பித்தனர்.

ம.பி. அரசியல் குழப்பம் உச்சத்தை எட்டியுள்ளது. முதல்வர் கமல்நாத்திற்கு எதிராக ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு பெற்ற 17 எம்.எல்.ஏ.,க்கள், பெங்களூருவுக்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் முதல்வர் கமல்நாத் தனது இல்லத்தில் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் திக்விஜய்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட 16 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இந்நிலையில் இன்று(மார்ச் 10) மாலை காங்., எம்.எல்.ஏ.,க்களின் அவசரக்கூட்டம் ம.பி., முதல்வர் தலைமையில் நடைபெறுகிறது.

இந்நிலையில் கூட்டம் முடிந்து காங்கிரஸ் அமைச்சர் சாஜன் சிங் வர்மா கூறும்போது, “பாஜக வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது, இதனையடுத்தே அமைச்சரவையை மாற்றி அமைத்து விரிவாக்கம் செய்ய வசதியாக 16 அமைச்சர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளோம். ஆட்சியக் கவிழ்க்க பாஜகவின் சதியை முறியடிக்கவே இந்த அமைச்சரவை மாற்றம்” என்றார்.

ராஜினாமா செய்த காட்டிலாக்கா அமைச்சர் உமங் சிங்கார் கூறும்போது, “அரசு பாதுகாப்பாகவே உள்ளது, புதிய அமைச்சரவை அமைக்கப்படும்” என்றார்.

போர்க்கொடி தூக்கிய சிந்தியாவுக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவியளித்து சமரசம் செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதே போல் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியும் சிந்தியாவுக்கு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையே சிந்தியா பாஜக தலைவர்களை சந்திப்பதாக கடும் வதந்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியைக் கவிழ்த்ததில் ‘மூளை’யாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் பாஜகவின் அரவிந்த் லிம்பாவலி இந்த விவகாரத்தை கையாண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT