மும்பையில் ஹோலி கொண்டாட்டங்கள் அமைதியாக நடப்பதை உறுதி செய்வதற்காக நகரம் முழுவதும் 40,000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில், வண்ணத் திருவிழாவான ஹோலி தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் திங்கள்கிழமை இரவு நெருப்புமூட்டி கொண்டாடத் தொடங்குவார்கள். நாளை முழுவதும் நடைபெறும் இக்கொண்டாட்டம் அமைதியாக நடைபெறுவதற்காக மும்பை காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மும்பை துணை காவல் ஆணையர் பிரணய் அசோக் கூறியதாவது:
''திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நிகழும் ஹோலி கொண்டாட்டங்கள் அமைதியாக நடப்பதை உறுதி செய்வதற்காக மும்பை முழுவதும் 40,000க்கும் மேற்பட்ட காவல்ர்கள் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று தொடங்கும் ஹோலி பண்டிகைக் கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற மாநில ரிசர்வ் காவல் படை (எஸ்ஆர்பிஎஃப்), கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றல் குழு, மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆகியவற்றின் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நகரின் பொது இடங்களில் எந்தவிதமான ஒழுங்கற்ற நடத்தை எதுவும் ஏற்படாமல் தடுக்க கொண்டாட்டங்களை உன்னிப்பாக கண்காணிப்பார்கள். இதில் கூடுதலாக, விரைவு மீட்புக் குழுக்களும் (கியூஆர்டி) இடம் பெறும், குறும்பு விளையாட்டுகளில் விதி மீறல்கள் ஏற்பட்டால் சிசி டிவி கேமராக்களின் பரந்த நெட்வொர்க் மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மும்பையில் உள்ள கடற்கரைகள், முக்கியமான வழிபாட்டுத் தலங்கள், மால்கள் மற்றும் ஹோலி பார்வையாளர்கள், அரசியல் தலைவர்களின் சிலைகளைப் பாதுகாக்கவும் அதைச் சுற்றி காவல் பணியாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.
தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன்களை வீசுவதோடு, பொது இடங்களில் வண்ணங்களை வீசும் குறும்புக்காரர்களையும் போலீஸார் கவனிப்பார்கள். இக்கொண்டாட்டங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கிண்டல் சம்பவங்களைத் தடுப்பதற்கும், குடிமக்களில் உள்ள காவல்துறையினர் பொது இடங்களில் இருப்பார்கள்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கட்டுப்படுத்த சுமார் 1450 காவல் அதிகாரிகள் சாலைகளில் வருவார்கள்".
இவ்வாறு மும்பை துணை காவல் ஆணையர் தெரிவித்தார்.