மரபணு விமர்சனத்தை பிரதமர் நரேந்திர மோடி திரும்பப் பெறவேண்டும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 25-ம் தேதி முசாபர்பூரில் பேசிய பிரதமர் மோடி, “நிதிஷ்குமாரின் மரபணுவில் ஏதோ பிரச்சினை உள்ளது. ஆனால் ஜனநாயகத்தின் மரபணு அதுபோல் இல்லை. ஜனநாயகத்தில் அரசியல் எதிரிகளுக்கும் நீங்கள் மரியாதை தரவேண்டும்” என்றார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு நிதிஷ்குமார் எழுதிய திறந்த மடலில், “உங்கள் விமர்சனம் எனது குடும்ப பரம்பரை பற்றியதாக இருந்தாலும் பிஹார் மக்கள் அவமதிக்கப்பட்டதாகவும் மாநிலத்தின் பெருமை குலைக்கப் பட்டதாகவும் பெரும்பாலானோர் கருதுகின்றனர்.
பிஹார் மக்கள் மீது உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் காழ்ப்புணர்வு இருக்கலாம் என்ற கருத்தை இது நம்பும்படியாகச் செய்கிறது.
இந்த வார்த்தைகளை திரும்பப் பெறுவது குறித்து நீங்கள் பரிசீலிக்க வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப் பளித்து இதை திரும்பப் பெறு வதன் மூலம் மக்களிடையே உங்கள் மீதான மரியாதை உயரும் என்றே கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.