இந்தியா

அரசியல்வாதி மகளை காதலித்த இளைஞரை எரித்துக் கொன்ற 3 பேரின் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் அரசியல்வாதி மகளை காதலித்த இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.

முன்னாள் எம்.பி. டிபி யாதவ். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர் சமாஜ்வாதி, பாஜக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்துள்ளார். இவரது மகள் பார்தியும், தொழிலதிபர் நிதீஷ் கட்டாரா (25) என்பவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு டி.பி.யாதவ் மற்றும் அவரது மகன்கள் விகாஸ் யாதவ், விஷால் யாதவ் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். கடந்த 2002-ம் ஆண்டும் பிப்ரவரியில் நள்ளிரவு நேரத்தில் நிதிஷ் கட்டாராவை விகாஷ் மற்றும் விஷால் ஆகியோர் கடத்திச் சென்று தீ வைத்து எரித்துக் கொன்றனர். இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காதலித்த இருவரும் வேறு சாதியினர் என்பதால் இந்த கொடூர கொலை நடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை வழக்கில் விகாஸ் யாதவ், விஷால் யாதவ் மற்றும் அவர்களுக்கு உதவிய சுக்காதேவ் பெஹல்வன் ஆகியோர் குற்றவாளிகள் என 2014-ம் ஆண்டு உள்ளூர் நீதிமன்றம் உறுதி செய்து அவர்களுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதையடுத்து அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி கட்டாராவின் தாய் சார்பில் டெல்லி உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் யாதவ் சகோதரர்களுக்கு 25 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம், சுக்காதேவுக்கு 20 ஆண்டுகளும் தண்டனை வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இது மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை, ஒரு நபரை பழி வாங்க வேண்டும் என்று கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர். எனவே டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்கிறோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

SCROLL FOR NEXT