மக்களவைத் தேர்தல் தேர்தல் முடிவுகளையடுத்து, சமாஜ்வாதி கட்சியின் 36 மூத்த தலைவர்கள் நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது மாநிலக் கிளைகளையும், அதன் 11 பிரிவுகளையும் கலைத்து கட்சியின் தேசியத் தலைவர் முலாயம்சிங் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
எனினும், அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கட்சியின் மாநிலத் தலைவராகத் தொடர்வார் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 80 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது. 73 இடங்களில் பா.ஜ.க.வும் அதன் கூட்டணியான அப்னா தல் கட்சியும், 2 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வென்றன.
சமாஜ்வாடி கட்சி வென்ற ஐந்து இடங்களில் மணிப்பூரி மற்றும் அசம்கார்க் ஆகிய இரண்டு இடங்களில் முலாயம் சிங் வெற்றி பெற்றுள்ளார். மீதி மூன்று இடங்களான கன்னோஜ், பதான் மற்றும் பிரோஸாபாத்தில் முறையே முலாயம் சிங்கின் மருமகளான டிம்பிள் யாதவ், முலாயமின் உறவினர்கள் தர்மேந்திர யாதவ் மற்றும் அக்ஷய் யாதவ் வென்றுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மே 16ம் தேதி முதல் அக்கட்சி மீளாய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.