புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கியது. கடந்த வாரத்தில் மாநிலங்களவை 28 மணி நேரம் 30 நிமிடங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், டெல்லி வன்முறை பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பெரும்பாலும் முடங்கின. நிர்ணயிக்கப்பட்டிருந்த 28 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு பதிலாக 2 மணி நேரம் 42 நிமிடங்கள் மட்டுமே அவை அலுவல்கள் நடந்தன. 25 மணி நேரம் 48 நிமிடங்கள் அமளியால் வீணானது. அவையின் ஆக்கபூர்வ செயல்பாடு வெறும் 9.50 சதவீத அளவுக்கே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட்ஜெட்டில் மானியக் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்க மாநிலங்களவையின் 8 நிலைக்குழுக்களின் கூட்டங்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. இந்தக் கூட்டங்கள் பிப்ரவரி 12 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளுக்கு இடையே நடைபெற்றதாகவும் அதிகாரிகள் கூறினர்.