புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் ஆதித்ய திவாரி. இவர் கடந்த 2016-ம் ஆண்டில் மனவளர்ச்சி குன்றிய சிறுவனை தத்தெடுத்தார். இதற்காக ஒன்றரை ஆண்டுகள் அவர் போராட வேண்டி இருந்தது. திவாரி தனியாக வசித்து வருவதால் அவர் குழந்தையை தத்தெடுப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. எனினும், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவினாஷ் என்ற சிறுவனை அவர் தத்தெடுக்க முடிந்தது. சிறுவனை தத்தெடுத்த பின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தான் பணியாற்றி வந்த வேலையை விட்டு, சிறுவனை பராமரிப்பதில் திவாரி கவனம் செலுத்தி வருகிறார். மேலும், மன வளர்ச்சி குன்றிய சிறுவர்களை பராமரிப்பது குறித்து பெற்றோர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். ஐ.நா. சபையின் சார்பில் மனவளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளை பராமரித்து வளர்ப்பது குறித்த கருத்தரங்கிலும் ஆதித்ய திவாரி கலந்துகொள்ள ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டது.
குழந்தைகளை தாயும் தந்தையும் சேர்ந்து அல்லது பெண்களே வளர்க்க முடியும் என்பதை மாற்றி ஆணாலும் சிறுவனை அதிலும் மன வளர்ச்சி குன்றிய சிறுவனை பராமரித்து வளர்க்க முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்கும் ஆதித்ய திவாரிக்கு, மகளிர் தினத்தை முன்னிட்டு ‘உலகின் சிறந்த தாய்’ விருது வழங்கப்பட்டுள்ளது.