பிரியங்கா காந்தி, ராணா கபூர் : கோப்புப்படம் 
இந்தியா

யெஸ் வங்கி சிக்கல்: பிரியங்கா காந்தி பலன் பெற்றார்:பாஜக-காங். இடையே கடும் வார்த்தை மோதல்

பிடிஐ

கடும் நிதிநெருக்கடியில் சிக்கி இருக்கும் யெஸ் வங்கி விவகாரத்தில் சோனியா காந்தி குடும்பத்துக்குப் பங்கு இருக்கிறது என்று பாஜகவின் குற்றச்சாட்டுக்குக் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இருகட்சிகளும் ட்விட்டரில் கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டன

யெஸ் வங்கி தற்போது கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இல்லை என்ற சந்தேகத்தின் பேரில் பல வங்கிகள் கடன் அளிக்க முன்வராத நிறுவனங்களுக்கும் யெஸ் வங்கி கடன் அளித்ததால் வராக்கடன் அதிகரித்தது.

இதனால் மூலதன திரட்டில் சிக்கல் எழுந்ததையடுத்து, யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி எடுத்துக் கொண்டது. சட்டவிரோத பணப்பரிமாற்றச்சட்டத்தின் கீழ் அந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூர் அமலாக்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு லண்டனில் முதலீடு செய்துள்ளதும், அரசியல்வாதிகளிடம் இருந்து வாங்கப்பட்ட 44 விலை உயர்ந்த ஓவியங்கள்,20 க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் நடத்தி வருவது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தை வைத்துதான் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் கடும் ட்விட்டர் தளத்தில் கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டன. அதாவது ராணா கபூர் வீட்டில் 48 விலை உயர்ந்த ஓவியங்கள் இருந்தன. இந்த ஓவியங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நம்பிக்கையை, நட்பை பெறுவதற்காக அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் விலை கொடுத்து வாங்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியிடம் இருந்து அவரின் தந்தையும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஓவியத்தை எம்.எப். ஹூசைன் பெயின்டிங் மூலம் ரூ.2 கோடிக்கு ராணா கபூர் வாங்கியுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியது.

பாஜக தகவல் தொழில்நுட்பப்பிரிவு பொறுப்பாளர் அமித் மாள்வியா

இதுகுறித்து பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளர் அமித் மாளவியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், " இந்தியாவின் ஒவ்வொரு நிதிமோசடிக் குற்றச்சாட்டிலும் காந்தி குடும்பத்துக்கு ஆழமான தொடர்பு இருக்கிறது. விமான டிக்கெட்டுகளை சோனியாவுக்கு விஜய் மல்லையா அனுப்புவார். மன்மோகன் சிங், ப.சிதம்பரத்துக்குக் கூட நல்ல நட்பு இருந்தது. மல்லையா தப்பிவிட்டார். நிரவ் மோடியின் மிகப்பெரிய நகைக்கடையை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். நிரவ் மோடி வங்கி மோசடியில் சிக்கினார். பிரியங்கா காந்தியின் ஓவியங்களை ராணா கபூர் ரூ.2 கோடிக்கு வாங்கினார்" எனத் தெரிவித்தார்

பாஜகவின் இந்த குற்றச்சாட்டைக் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி ட்விட்டரில் கூறுகையில், " கடந்த 2014ம் ஆண்டு மார்ச்சில் ரூ.55,633 கோடி யெஸ் வங்கி கடன் அளித்தது. ஆனால், இது மோடி பிரதமரானபின் 2019, மார்ச் மாதத்தில் ரூ.2.41 லட்சம் கோடியாகக் கடன் அளவு அதிகரித்தது.

பணமதிப்பிழப்பு நடந்தபின் அடுத்த 2 ஆண்டுகளில் வங்கியின் கடன் வழங்கல் 100 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 2016 மார்ச்சில் ரூ.98,210 கோடியாக இருந்தது, 2018,மார்ச் மாதத்தில் ரூ.2018, 2,03 534 கோடியாக அதிகரித்துள்ளது. பிரதமர், நிதியமைச்சர் தூங்கிக்கொண்டிருந்தார்களா, அல்லது கண்டுகொள்ளாமல்விட்டார்களா.

பிரியங்கா காந்தி பெற்ற பணம் அனைத்தும் முறையாக வருமானவரியில் காட்டப்பட்டு வரி செலுத்தப்பட்டுள்ளது. இது திசைதிருப்பும் செயல்" எனத் தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT