புதுடெல்லி: ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜா தந்திரிக்) கட்சியானது பாஜகவுடன் இணைந்ததற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாஜகவும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பி) கட்சியும் பிரதான எதிர்க்கட்சிகளாக இருந்தன. இந்நிலையில், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பி) தலைவரான பாபுலால் மராண்டி தனது கட்சியை பாஜகவுடன் கடந்த மாதம் இணைத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக பாபுலால் மராண்டி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவரை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்குமாறு பாஜக வலியுறுத்தி வருகிறது. எனினும், இரு கட்சிகளின் இணைப்புக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே பாபுலால் மராண்டியை சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவராக அறிவிக்க முடியும் என ஆளுங்கட்சியினர் கூறி வந்தனர்.
இந்தச் சூழலில், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பி) - பாஜக இணைப்புக்கு தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை பாஜக வரவேற்றுள்ளது. - பிடிஐ