இந்தியா

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் அமைதியாக முடிந்தது: நாளை மறுநாள் முடிவு

செய்திப்பிரிவு

கர்நாடக மாநில தலைநகரமான‌ பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில் வழக்கத்தைவிட குறைவான அளவிலேயே வாக்குகள் பதிவாகி உள்ளன.

198 வார்டுகளை கொண்ட பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம், அதிமுக, சுயேட்சைகள் என 1,120 பேர் களத்தில் உள்ளனர். இதில் ஹொங்க சந்திரா வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் மீதமுள்ள 197 வார்டுகளில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார் 78 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 20 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் பெரும்பாலான வார்டுகளில் காலையில் வாக்குப்பதிவு மந்தமாகக் காணப்பட்டது. எனினும், மாலை 4 மணிக்கு மேல் வாக்காளர்கள் வருகை அதிகரித்ததால், வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் 40-ஐ கடந்தது. கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் 44 சதவீத‌ வாக்குகள் மட்டுமே பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வித வன்முறையும் இல்லாமல் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தல் முடிவுகள் வரும் 25-ம் தேதி வெளியாகிறது. இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் முதலிடத்தையும், பாஜக, மஜத அடுத்தடுத்த இடங்களையும் கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது.

வாக்குப்பதிவு குறைந்தது ஏன்?

பெங்களூருவில் நேற்று காலை முதல் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்ததால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதேபோல நேற்று விடுமுறை நாள் என்பதால், தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுவோர் பலர் வெளியூர்களுக்கு சென்று விட்டதால் வாக்களிக்கவில்லை.

SCROLL FOR NEXT