ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டது. மாவோயிஸ்ட்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளர் (ஊரகம்) சைலேந்திர குமார் சின்ஹா நேற்று கூறியதாவது:
பர்பி சிங்பும் மாவட்டம் காட்சிலா நகருக்கு அருகே ஷ்யாம் சுந்தர்பூர் கோர்பந்தா சாலையில் கண்ணி வெடி மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக திங்கள்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, சக்தி வாய்ந்த 20 கிலோ கண்ணி வெடி இருந்தது தெரியவந்தது. பின்னர் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் செயலிழக்க வைக்கப்பட்டது. மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து இந்த கண்ணி வெடி வைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இது மாவோயிஸ்ட்களின் சதி வேலையாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுதந்திர தினம் வர உள்ள நிலையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் மாவட்ட போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் அடங்கிய கூட்டுப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.