பாஜகவை விட்டு தான் பிரிந்துள்ளோம், இந்துத்துவாவை விட்டு பிரியவில்லை என மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கூறினார்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா கூட்டணி ஆட்சியமைத்துள்ளது. ஹிந்துத்துவா கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டணி இருந்தாலும் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என அறிவித்து இருந்தார்.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அவர் அங்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் முதல்வராக பதவியேற்றதால் அவர் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் முதல்வர் உத்தவ் தாக்கேர இன்று அயோத்தி சென்றார்.
இதையொட்டி ஏராளமான சிவசேனா தொண்டர்களும் சிறப்பு ரயில் மூலம் அயோத்தி சென்றடைந்தனர். இதைத்தொடர்ந்து உத்தவ் தாக்கரே இன்று விமானம் மூலம் அயோத்தி சென்றடைந்தார். அவருக்கு அயோத்தியில் சிவசேனா தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பாஜகவை விட்டு தான் பிரிந்துள்ளோம், ஹிந்துத்துவாவை விட்டு பிரியவில்லை. பாஜக என்றால் இந்துத்துவா என அர்த்தமல்ல. ராமரை வழிபடுவதற்காகவே இங்கு வந்தேன். எனது குடும்பத்தினரும் வந்துள்ளனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட எங்கள் அறக்கட்டளையில் இருந்து ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சரயு நதிக்கரையில் நடைபெறும் ஆரத்தி வழிபாட்டில் பங்கேற்கப் போவதில்லை என உத்தவ் தாக்ரே ஏற்கெனவே அறிவித்துள்ளார்.