கரோனா வைரஸ் குறித்து வரும் தேவையற்ற வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம். அதிலிருந்து ஒதுங்கியே இருங்கள். எந்த சந்தேகம் இருந்தாலும் மருத்துவர்களிடம் கேட்டுத் தெளிவடையுங்கள் என மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், மக்கள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்துச் சொல்வதைத் தவிர்த்து, இருகரம் கூப்பி வணக்கம் (நமஸ்தே) சொல்லுங்கள் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்
சீனாவின் ஹூபே மாநிலம், வூஹான் நகரை மையமாக வைத்துப் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இதுவரை சீனாவில் மட்டும் 3,400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 91 நாடுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸைத் தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசின் ஜன் அவுஷதி கேந்திரா (மருந்துக்கடை) நடத்தும் உரிமையாளர்கள், பிரதமர் தேசிய ஜன்அவுஷதி பரியோஜனா (பிஎம்பிஜேபி) திட்டத்தின் பயனாளிகளிடம் பிரதமர் மோடி நேரடியாக கானொலி மூலம் உரையாடினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
''நான் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்வது, தயவுசெய்து கரோனா வைரஸ் குறித்த தேவையற்ற வதந்திகளையும், உண்மைக்கு மாறான செய்திகளையும் நம்பாதீர்கள். அதிலிருந்து நீங்கள் விலகியே இருங்கள்.
கரோனா வைரஸ் குறித்து எந்தவிதமான சந்தேகம் இருந்தாலும் அது குறித்து மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள். மக்கள் கை குலுக்கி வணக்கம் செய்வதைத் தவிர்த்து, இருகரம் கூப்பி நமஸ்தே (வணக்கம்) என்று சொல்லுங்கள்.
மத்திய அரசின் ஜன் அவுஷதி கடைகள் நாடு முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் செயல்படுகின்றன. இதன் மூலம் மக்களுக்கு உதவி செய்து செய்து ரூ.2000 கோடி முதல் ரூ.2,500 கோடி முதல் மக்கள் சேமிக்க உதவுகிறது. மலிவான விலையில் தரமான மருந்துகளைப் பெற்று, ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த ஜன் அவுஷதி நாள் கொண்டாட்டத்துக்கான நாள் மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்தியர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவதைக் கொண்டாடும் நாளாகும். இந்தத் திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை பெறும் செலவும் குறைவு. மருந்துகள் வாங்கும் செலவும் குறைவு''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.