டெல்லி கலவரம் தொடர்பாக வகுப்புவாதத்தைத் தூண்டும் செய்திகளைப் பாரபட்சத்துடன் ஒளிபரப்பியதாக ஏசியா நெட் நியூஸ், மீடியா ஒன் ஆகிய இரு மலையாள மொழி சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 48 மணிநேரத் தடையை மத்திய அரசு நீக்கியது.
இன்று அதிகாலை 1.30 மணி முதல் ஏசியா நெட் நியூஸ் சேனலும், மீடியா ஒன் சேனல் இன்று காலை 9.30 மணி முதல் செய்திகளை ஒளிபரப்பு செய்யத் தொடங்கின என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 48 மணிநேரத் தடையை நீக்கக் கோரி இரு சேனல்களும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்தத் தடை நீக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இருவாரங்களுக்கு முன் டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வகுப்புக் கலவரத்தில் 46 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதில் மலையாள மொழி சேனல்களான ஏசியா நெட் நியூஸ், மீடியா ஒன் ஆகிய இரு சேனல்களும் டெல்லி கலவரம் தொடர்பாகப் பாரபட்சமான செய்திகளை ஒளிபரப்பி, வகுப்புவாதத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியது.
அதுமட்டுமல்லாமல், அந்த இரு சேனல்களும், டெல்லியில் குறிப்பிட்ட மத வழிபாட்டுத் தலம் அடித்து நொறுக்கப்பட்ட காட்சியையும், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆதரவாகவும் செய்திகளை ஒளிபரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
சிஏஏ ஆதரவாளர்கள் செய்தி வன்முறைக் காட்சிகள் என்று மீடியா ஒன் சேனல், காட்சிகளை ஒளிபரப்பியது. மேலும், ஆர்எஸ்எஸ், அந்த அமைப்போடு தொடர்புடையவர்கள் குறித்தும் கேள்வி எழுப்பி, டெல்லி போலீஸார் செயல்படாமல் இருந்தது குறித்து கடுமையாக விமர்சித்தது.
ஏசியா நெட் நியூஸ் சேனலில் டெல்லி கலவரத்தை மத்திய போலீஸ் படைகள் கட்டுப்படுத்தவில்லை. கலவரம் நடந்த இடத்துக்கு நீண்ட நேரத்துக்குப் பின்புதான் போலீஸார் வந்தனர். அதுமட்டுமல்லாமல் அமித் ஷாவுடன் நீண்டநேர ஆலோசனைக்குப் பின்புதான் போலீஸார் சம்பவ இடங்களுக்குச் சென்றனர் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியது. இதையடுத்து, இரு சேனல்களுக்கும் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிவரை ஒளிபரப்புச் செய்ய தடை விதித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது
இந்நிலையில் சேனல்கள் ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்ட தடை பத்திரிகை சுதந்திரத்தின் மீதும், கருத்துச் சுதந்திரத்தின் மீதும் விழுந்த தாக்குதல் என்று காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
மேலும், தடைக்கு ஆளான இரு சேனலின் நிர்வாகிகளும் இந்தத் தடைக்குக் கண்டனம் தெரிவித்தனர். இவர்கள் மத்திய அரசுக்கு எழுதிய விளக்கக் கடிதமும் மத்திய அரசுக்கு மனநிறைவு அளிக்கவில்லை. இருந்தபோதிலும் 48 மணிநேரத் தடையை நீக்கியது மத்திய அரசு.