ராஜஸ்தானில் கரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்யும் மருத்துவ நிபுணர்கள். 
இந்தியா

ராஜஸ்தானுக்கு வந்த இத்தாலியத் தம்பதி; தொடர்பு கொண்ட 280 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை

பிடிஐ

ராஜஸ்தானுக்கு வந்த இத்தாலியத் தம்பதியைத் தொடர்பு கொண்ட 280 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கரோனா வைரஸ் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவின் ஹூபே மாநிலம், வூஹான் நகரை மையமாக வைத்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இதுவரை சீனாவில் மட்டும் 3,400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 91 நாடுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸைத் தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

சீனாவுக்கு அடுத்தபடியாக தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவிலும் கரோனா வைரஸ் நோய் பரவியுள்ளதால் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் இத்தாலியிலிருந்து ஒரு தம்பதியர் இந்தியாவுக்குச் சுற்றுலா வந்தனர். அவர்கள் இருவரும் பிப்ரவரி 21 முதல் 28 வரை ஜுன்ஜுனு, பிகானேர், ஜெய்சால்மர், ஜோத்பூர், உதய்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் குழுவில் அங்கம் வகித்த வயதான இத்தாலியத் தம்பதியருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர், அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டன. இந்த மாதிரிகள் எஸ்எம்எஸ் மருத்துவக் கல்லூரியின் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டன.

இதுகுறித்து ராஜஸ்தான் சுகாதார கூடுதல் தலைமைச் செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறுகையில், ''இந்தியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குழுவில் இடம் பெற்ற ஒரு இத்தாலியத் தம்பதியினருக்கு கரோனா வைரஸ் இருப்பது சோதனையில் தெரியவந்தது. அதனால் அவர்களுடன் பயணம் செய்தவர்கள், அவர்கள் சென்ற இடங்களில் தொடர்பு கொண்டவர்கள் என 280 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான இத்தாலியத் தம்பதியர் உட்பட இதுவரை 282 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை எந்த மாதிரியும் நிலுவையில் இல்லை.

மேலும், இத்தாலியத் தம்பதியினர் சிகிச்சைக்காக எஸ்எம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT