பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

இந்தியா வந்த 13 இத்தாலிய சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு;  தீவிரக் கண்காணிப்பு

செய்திப்பிரிவு

13 இத்தாலிய சுற்றுலாப் பயணிகளும் அமிர்தசரஸில் தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸுக்கு (கோவிட் -19) அந்த நாட்டில் இதுவரை 3000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது.

இந்தியாவிலும் 31 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. டெல்லி மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது. டெல்லியைச் சேர்ந்தவர் சமீபத்தில் இத்தாலி சென்று திரும்பியுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்தவர் துபாய் சென்று திரும்பியுள்ளார்.

மேலும், இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் 13 பேருக்கு கரோனா வைரஸ் தாக்கியிருப்பதாகத் தகவல் வெளியானது. அவர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலைப் பார்ப்பதற்காக வந்த நிலையில் அவர்களுக்கு ஏற்கெனவே கரோனா வைரஸ் தாக்கிய அறிகுறி தெரிந்ததால் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

மருத்துவப் பரிசோதனையில் கரோனா வைரஸ் தாக்கியிருக்கக்கூடும் என முதல் கட்டமாக உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவ இவர்களும் காரணமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 13 இத்தாலிய சுற்றுலாப் பயணிகளும் அமிர்தசரஸில் தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். முதலில் இவர்கள் அனைவரும் ஈரானியர்கள் எனக் கருதப்பட்டது. பின்னர் விசாரணையில் அவர்கள் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.

SCROLL FOR NEXT