கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள அவராகெரே அருகில் ஏற்பட்ட மிகப்பெரிய சாலை விபத்தில் 13 பேர் பலியாகி 4 பேர் காயமடைந்தனர்.
தமிழ்நாடு ஹோசூரைச் சேர்ந்த 13 பேர் எஸ்.யு.வி. காரில் தர்மஸ்தலாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது நேரம் அதிகாலை 2.30 மணி என்பதால் ஓட்டுநர் கண் அசந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டை இழந்த கார் படுவேகமாக வந்து கொண்டிருந்ததால் சாலைத் தடுப்பை உடைத்துக் கொண்டு மறுபக்கம் எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த இன்னொரு கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மஞ்சுநாத் (35), தனுஜா (25), 9 மாதக் குழந்தை, கவுரம்மா (60), ரத்தினம்மா (52), சுந்தர் ராஜ் (48), ராஜேந்திரா (27), சரளா (32), பிரஷன்யா (14) ஆகியோரும் லஷ்மிகாந்த், சந்தீப், மது ஆகிய மற்றொரு காரில் வந்தவர்களும் கொடூர விபத்திற்கு பலியாகினர்.
காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.